எலைட் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி- 2019 ஆரம்ப போட்டிகளில் மருதம், எலைட் அணிகள் வெற்றி

மருதமுனை எலைட் விளையாட்டுக்கழகத்தின் 27வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் எலைட் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி – -2019 மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தில் (06) ஆரம்பமானது.

கழகத்தின் தலைவர் எம்.ஐ.நஜிமுல் றியாஸ் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நாள் நிகழ்வுக்கு உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எஸ்.அன்வர்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

எலைட் விளையாட்டு கழகத்தின் செயலாளர் கல்முனை சுப்பர் சென்டர் உரிமையாளர் ஏ.ஆர்.முஹம்மட் அஸாம் கௌரவ அதிதியாகவும், மருதமுனை அல்-ஜாபர் என்டபிரைசஸ் நிறுவனத்தின் தவிசாளர் எம்.ஐ.எம்.முபீன், 'நேவா' டிஸ்ரிபியுட் உரிமையாளர் எஸ்.நஸார் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் இதில் கலந்து கொண்டனர். அண்மையில் திடீர் சுகையீனம் காரணமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர் உடற்கல்வி ஆசிரியர் மர்ஹூம் சம்சுதீன் முஹம்மது சர்மீலுக்காக 2 நிமிடம் துஆ பிரார்த்தனையுடன் ஆரம்ப போட்டிகள் நடைபெற்றன. அணிக்கு 11 பேர் கொண்ட 7 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்று வரும் இந்த சுற்றுப் போட்டியின் போட்டிகள் அனைத்தும் மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

முதலாவது போட்டி மருதமுனை பென்சின், மருதம் அணிகளுக்கிடையில் (06) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பென்சின் அணியினர் 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மருதம் அணியினர் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 5.2 ஓவர்கள் முடிவில் 69 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் எலைட், றோயல் அணியினர் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எலைட் வி.கழகத்தினர் 7 ஓவர்கள் முடிவில் 96 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். 97 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் அணியினர் 7 விக்கட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். இந்த போட்டியில் 56 மேலதிக ஓட்டங்களால் எலைட் அணியினர் வெற்றி பெற்றனர். சிறப்பு ஆட்டக்காரராக தெரிவானவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டன.

ஆரம்ப நாள் நிகழ்வின்போது, எலைட் வி. கழகத்தின் தலைவர் எம்.ஐ.நஜிமுல் றியாஸ், சிரேஸ்ட வீரர்களான ஐ.எல்.எம்.முபீன், எம்.எச்.எம்.அஸ்மி ஆகியோரது சேவையை பாராட்டி வாழ்த்துப் பா மற்றும் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்த சுற்றுப் போட்டியில் யுனிவர்ஸ், மருதம்,கிறிஸ்டல், கல்பனா, மிமா, எலைற்,றோயல் ,ஒலிம்பிக், கோல்ட்மைன்ட் ,றெட்விங்ஸ், பென்ஷீன், பிரிஸ்பேன், கிங்ஸ்டன், மெரிடியன், அக்பர், கிறஸ்ற் ஆகிய 16 அணிகள் விளையாடி வருகின்றன. இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை