ரூ 200 கோடி நிதி மோசடி தொடர்பில் கோப் குழுவில் விசாரணை வேண்டும்

தாமரைக் கோபுர நிர்மாணப் பணி

தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் 200 கோடி ரூபா நிதி மோடிசகள் தொடர்பில் கோப் குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

தாமரைக் கோபுர திறப்பு விழாவின் போது 200 கோடி ரூபா ஊழல் இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 200 கோடி ரூபா என்பது சிறிய தொகையல்ல.இதனை 2,500 ரூபா வீதம் 8 இலட்சம் குடும்பங்களுக்கு சமூர்தி கொடுப்பனவாக வழங்க முடியும். கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளில் மோசடிகள் இடம்பெற்றதாக கூறப்படுவது சாதாரணமான விடயமல்ல. இது பாரதூரமான குற்றமாகும். இந்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். இந்த மோசடிகளுடன் தொடர்புள்ளவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் இந்த பாரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளது. அவரை பிரதமராக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய தவறு செய்தார். 200 கோடியும் நாட்டு மக்களின் வரிகள் மூலம் பெறப்பட்டதாகும்.இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நிதி தொடர்பிலான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. இது தொடர்பில் கோப் குழு ஊடாக விரைவாக விசாரணைகள் நடத்தி ஊழல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். ஒப்பந்த சேவையை இல்லாதொழிப்பதாக தற்போதைய அரசாங்கம் கடந்த காலங்களில் பல தடவைகள் வாக்குறுதியளித்திருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஒப்பந்த சேவையை இல்லாதொழிப்பதாக மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். இந்த திருத்தச் சட்டத்தால் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க முடியாது. இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை