லசித் மலிங்க 20க்கு 20 சர்வதேச போட்டிகளில்

புதிய சாதனை

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்க 20க்கு20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையில் நேற்றுமுன்தினம் (1) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ரி20 தொடரின் முதல் போட்டியில் கொலின் டி கிராண்ட்ஹோமின் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலமே லசித் மலிங்க, ரி 20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லசித் மலிங்க கைப்பற்றிய குறித்த விக்கெட் நியூசிலாந்து அணிக்கு எதிரான ரி 20 தொடரின் முதல் போட்டியில் லசித் மலிங்கவினால் பெறப்பட்ட இரண்டாவது விக்கெட்டாக அமைந்ததோடு, ரி20 சர்வதேச போட்டிகளில் லசித் மலிங்கவின் 99 ஆவது விக்கெட்டாகவும் அமைந்தது.

இவ்வாறாக 99 விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம் ரி 20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (98) கைப்பற்றிய பாகிஸ்தான் அணியின் சகலதுறைவீரர் சஹீட் அப்ரிடியின் சாதனையை முறியடித்து லசித் மலிங்க, ரி 20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய புதிய பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கின்றார்.

இலங்கை 20க்கு 20 அணியின் தலைவரான லசித் மலிங்க, இந்த சாதனையினை படைப்பதற்கு நியூசிலாந்து அணியுடனான 20க்கு20 போட்டியோடு சேர்த்து மொத்தமாக 74 போட்டிகளை எடுத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேநேரம், 20க்கு20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் லசித் மலிங்கவின் பந்துவீச்சு சராசரி 19.44 ஆக உள்ளது.

லசித் மலிங்க 20க்கு 20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த சாதனை ஒருபுறமிருக்க நியூசியலாந்து அணியுடனான ரி 20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியிருக்கின்றது.

இலங்கை அணியின் தோல்வியினால் நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இந்த ரி 20 தொடரின் அடுத்த போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (3) கண்டி சர்வதேச பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை