இலங்கையுடனான 20க்கு 20 தொடர்: நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி 20 போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 2- -0 என கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் 1--0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், (3) இரண்டு அணிகளும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியிருந்தன.

இரண்டு அணிகளிலும் ஒவ்வொரு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இலங்கை அணியில் கசுன் ராஜிதவுக்கு பதிலாக லக்ஷான் சந்தகன் களமிறங்க, நியூசிலாந்து அணியில் சிறிய உபாதைக்கு முகங்கொடுத்திருக்கும் ரோஸ் டெய்லருக்கு பதிலாக டொம் ப்ரூஸ் களமிறக்கப்பட்டிருந்தார்.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணி, முதல் போட்டியை போன்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, குசல் மெண்டிஸின் ஆரம்பம், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் இணைப்பாட்டம் மற்றும் ஷெஹான் ஜயசூரியவின் பங்களிப்புடன் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

முதல் போட்டியில் அரைச் சதம் கடந்திருந்த குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, நிரோஷன் டிக்வெல்ல 39 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து, இலங்கை அணிக்கு மூன்றாவது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில், ஷெஹான் ஜயசூரிய 20 ஓட்டங்களையும், இசுரு உதான 13 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 11 ஓட்டங்களையும் தங்களது பங்கிற்கு பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்துவீச்சில் செத் ரான்ஸ் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி மற்றும் ஸ்கொட் குகலெய்ன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, கொலின் டி கிரெண்டோம் மற்றும் டொம் ப்ரூஸ் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்தின் உதவியுடன் 19.4 ஓவர்கள் நிறைவில் 165 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஆரம்பத்தில் கொலின் மன்ரோ, டிம் செய்பர்ட் மற்றும் ஸ்கொட் குகலெய்ன் ஆகியோரது விக்கெட்டுகளை இலங்கை அணி 38 ஓட்டங்களுக்குள் கைப்பற்றியிருந்தாலும், அதன் பின்னர் களமிறங்கிய கொலின் டி கிரெண்டோம் (59) மற்றும் டொம் ப்ரூஸ் (53) ஆகியோரின் 109 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தால் நியூசிலாந்து அணி இலகுவாக வெற்றியை பெற்றது.

இறுதி ஓவரில் 7 ஓட்டங்களை பெறவேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி சார்பாக பந்துவீசிய வனிந்து ஹசரங்கவின் முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், அடுத்த பந்தில் மிச்சல் சென்ட்னர் சிக்ஸர் விளாசி அணியின் வெற்றியை இலகுவாக்கியிருந்தார். குறித்த சிக்ஸரானது ஷெஹான் ஜயசூரியவினால் பிடியெடுக்கப்பட்டிந்தாலும், மெண்டிஸ் மற்றும் ஜயசூரிய ஆகியோர் மோதி விழுந்ததில், ஜயசூரிய பௌண்டரியை எல்லையை தொட்டிருந்தார். இதனால், குறித்த சிக்ஸர் நியூசிலாந்து அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அகில தனஞ்சய அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்த, இசுரு உதான மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி 20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை