மகாவலி எச் வலயம் சம்பியன் 1500 வீர, வீராங்கனைகள் பங்கேற்பு

31வது மகாவலி விளையாட்டு விழா

மகாவலி வேலைத்திட்டம் ஆரம்பமாகி ஐம்பது வருடங்கள் பூர்த்தியாகும் இச்சந்தர்ப்பத்தில் மகாவலி அபிவிருத்தியில் விசேட மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தன்னால் முடிந்துள்ளதாகவும் அதன் பிரதிபலன்கள் இன்றைய தினத்தை விட எதிர்காலத்திலேயே நன்மையளிக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதுடன், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதன் ஊடாக மகாவலி கங்கையைப்போல் மகாவலி வேலைத்திட்டமும் முன்னோக்கி செல்லும் என இன்று (08) பிற்பகல் மெதிரிகிரிய பிஷோப்புறவில் இடம்பெற்ற 31வது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கை நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதமளவில் பரந்துள்ள மகாவலி செயற்திட்டம் இலங்கையில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டமென்றும் அப்பணிகளில் பாரிய செயற்பாடுகளை நிறைவேற்றியதன் ஊடாக நாட்டின் விவசாய மக்களுக்கு தன்னால் பல கடமைகளை ஆற்ற முடிந்ததென்றும் தெரிவித்தார்.

மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டம் நாட்டின் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறையின் திருப்புமுனையாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதனூடாக ஆயிரக் கணக்கான குளங்களை நீரில் தன்னிறைவடைவதற்காக நிர்மாணிக்கப்படும் எலஹெர, வயம்பஎல, மினிப்பேஎல, வட மத்திய பெருங் கால்வாய் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் 23,000 கோடி ரூபாவை செலவழித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மகாவலி விவசாய குடும்பங்களின் பிள்ளைகளின் விளையாட்டுத்திறன்களை மேம்படுத்துவதற்காக நடாத்தப்படும் மகாவலி விளையாட்டுப்போட்டி இம்முறை வெகுவிமர்சையாக இரண்டு நாட்கள் இடம்பெற்றதுடன், 10 மகாவலி வலயங்களை உள்ளடக்கிய சுமார் 1500 வீர, வீராங்கனைகள் இதில் பங்குபற்றினர்.

விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டிய வீர, வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கிவைத்தார்.

இம்முறை விளையாட்டுப் போட்டியின் ஜனாதிபதி கிண்ணத்தை மகாவலி எச் வலயம் தட்டிச் சென்றதுடன், மகாவலி சீ வலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஜனாதிபதியினால் வெற்றிக் கிண்ணங்களை வழங்கியதுடன், விளையாட்டு போட்டிகளில் சிறந்த வீர, வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும் வழங்கிவைத்தார்.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க ஆகியோரும் சுகத் திலகரத்ன உள்ளிட்ட முன்னாள் விளையாட்டு வீர, வீராங்கனைகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் மெதிரிகிரிய பிஷோப்புற மகாவலி மைதானம் இன்று மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மகாவலி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம்மைதானம் அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக 170 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வலயத்தின் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகவும் இம் மைதானத்தை பயன்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை