யெமனில் சவூதி கூட்டணியின் தாக்குதல்களில் 100 பேர் பலி

யெமனில் சிறைச்சாலை ஒன்றின் மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி நடத்திய தீவிர வான் தாக்குதல்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தமார் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் உயிர் தப்பிய குறைந்தது 40 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இரவு நேரத்தில் ஆறு வான் தாக்குதல்களின் சத்தம் கேட்டதாக உள்ளுர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்கள் மூலம் ஆளில்லா விமானம் ஒன்று மற்றும் ஏவுகணை தளம் அழிக்கப்பட்டதாக யெமன் அரசுக்கு ஆதரவான சவூதி தலைமையிலான கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

எனினும் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்ட பகுதியே இந்த தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டதாக அரசு மற்றும் சவூதி கூட்டணிக்கு எதிரான ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தடுத்து வைத்திருப்பவர்களை பார்வையிட அந்த இடத்திற்கு இதற்கு முன்னர் சென்றிருப்பதாக செஞ்சிலுவை சங்கமும் குறிப்பிட்டுள்ளது.

அந்தத் தளத்தில் இருந்து சடலங்களை சேகரித்ததாக குறிப்பிடும் செஞ்சிலுவை சங்கம், அங்கு உயிர் தப்பியவர்கள் எஞ்சி இருப்பதற்கு குறைவான வாய்ப்பே இருப்பதாக செஞ்சிலுவை சங்கம் நேற்று குறிப்பிட்டது.

ஹுத்திக்கள் மூலம் தலைநகர் சானாவில் இருந்து ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி மற்றும் அவரது அமைச்சரவை துரத்தப்பட்ட 2015 ஆம் ஆண்டு தொடக்கம் யெமன் போருக்கு முகம்கொடுத்து வருகிறது. ஜனாதிபதி ஹதி அரசுக்கு ஆதரவு அளிக்கும் சவூதி அரேபியா கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கிட்டத்தட்ட நாளாந்தம் இந்தக் கூட்டணி வான் தாக்குதல்களை நடத்தி வருவதோடு, மறுபுறம் ஹூத்திக்கள் சவூதி அரேபியா மீது அடிப்படி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த உள்நாட்டு யுத்தம் உலகில் மிக மோசமான மனிதாபிமான அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மக்கள் தொகையில் 80 வீதமானவர்களான 24 மில்லியனுக்கும் அதிகமானவர்ளுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. இவர்களில் 10 மில்லியன் மக்கள் உயிர்வாழ்வதற்கு உணவு உதவியை நாடியுள்ளனர்.

2016 தொடக்கம் இந்த மோதல்கள் காரணமாக 70,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது.

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை