தேசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி

ஓகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பம்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற 97 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்ஹரா நகரங்களில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான முக்கிய போட்டித் தொடராக இது அமையவுள்ளது.

இதன்படி, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 600 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இதில் 486 வீரர்களும், 147 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களைப் போன்று இம்முறை போட்டித் தொடரில் பெண்களின் பங்குபற்றல் குறைவாக காணப்பட்டாலும், கண்டி மாவட்டத்திலிருந்து அதிகளவான போட்டியாளர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தின் ஊடாக இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற பாடசாலை வீரர்களும் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான மரதன் மற்றும் அரை மரதன் ஓட்டப் போட்டிகளில் இலங்கையின் தேசிய சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஹிருனி விஜேரத்ன, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் நோக்கில் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை ஏற்கனவே பெற்றுக்கொண்ட ஹிருனி விஜேரத்ன, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 10,000 மற்றும் 5,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2 தசாப்தங்களாக வசித்து வரும் ஹிருனி விஜேரத்ன, 2017 இல் முதல் தடவையாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றியிருந்தார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 97 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (09) மாலை கொழும்பில் இடம்பெற்றது.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை