அமெரிக்காவுடன் கோட்டாபயவே முதலில் ஒப்பந்தம் செய்திருந்தார்

நாட்டை முதலில் காட்டிக்கொடுத்தவர் கோட்டாதான்

அமெரிக்காவுடான ‘அக்ஸா’ ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக்கொடுப்பதாயின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே நாட்டை முதலில் காட்டிக் கொடுத்துள்ளார் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

கடந்த 100 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவுடன் இலங்கை பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. 2007ஆம் ஆண்டே முதன் முதலில் அக்ஸா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்ஷ இதில் கைச்சாத்திட்டிருந்தார். அக்ஸா ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தமாயின் கோட்டாபய ராஜபக்ஷவே முதலில் நாட்டைக் காட்டிக்கொடுத்துள்ளார் எனவும் கூறினார்.

அமெரிக்காவுடன் செய்யப்படவிருக்கும் ஒப்பந்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

2007ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் காலத்துக்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கே எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவும் இலங்கையும் ஆங்கிலேயேர் காலத்திலிருந்து ஒப்பந்தங்களை செய்துள்ளன. கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்நிலையில் எக்சா உடன்படிக்கையானது கோட்டாபய ராஜபக்ஷவினாலேயே கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது உங்களில் யாராவது அது பற்றி கதைத்தீர்களா? அதனை எதிர்த்தீர்களா? இல்லையே. அமெரிக்க பிரஜைகள் இருவரே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அக்ஸா உடன்படிக்கை நாட்டை காட்டிக்கொடுப்பது என்றால் கோட்டாபய ராஜபக்ஷவும் காட்டிக்கொடுப்பையே செய்துள்ளார். தவறு என்றால் அதனை அரச துரோக செயலாகவே கூறவேண்டும். இவர்கள் ஆரம்பித்த விடயங்களின் படி அந்த ஒப்பந்தத்தை தொடர வேண்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தினால் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பாக சட்டமா அதிபருக்கு அனுப்பி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வோம். இதன்படி இந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பாதிப்பான விடயங்கள் எதுவும் கிடையாது.

அமெரிக்கா கடந்த யுத்தக் காலத்தில் எமக்கு வழங்கக் கூடிய உதவிகளை வழங்கியது. அத்துடன் எமது பொருட்களை அதிகமாக அமெரிக்காவே வாங்குகின்றது. இவ்வாறான நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள்.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது கையெழுத்திட்ட சோபா ஒப்பந்தத்தில் அமெரிக்க பிரஜையொருவர் இங்கு குற்றமிழைத்தால் அந்நாட்டு சட்டப்படியே நடவடிக்கையெடுக்க முடியுமாக இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திடும் போதே நாடு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் அவ்வாறு காட்டிக்கொடுக்கவில்லை. இதனால் இந்த ஒப்பந்தத்தை நீடிக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

Sat, 08/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை