அதிகார பகிர்வை வழங்க ஐக்கிய தேசிய கட்சி உறுதி

தமிழ் மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு அமைவது அவசியம்

யாழ் நகரில் பிரதமர் அறிவிப்பு

அரசியலமைப்பு சபையினூடாக முன்மொழியப்பட்ட அதிகாரப் பகிர்வு மற்றும் தேசிய கொள்கை வகுப்பு என்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் உறுதியுடன் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் சுயாதீனமாக முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருப்பதை தான் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வந்த பிரதமர் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். அந்தவகையில் மாலை குருநகர் மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த காலங்களில் இவ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் காரணம் தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷையான அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.எனவே நாட்டின் பிரதமர் என்றில்லாமல் நாட்டின் முக்கிய கட்சியொன்றின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் இப் பிரச்சினை தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை கூற வேண்டும் என தனது உரையில் கேட்டார். இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

நாட்டில் பெரும்பான்மையாக இருக்கலாம், சிறுபான்மையாக இருக்கலாம் எல்லா சமூகங்களும் அபிமானத்தோடும் கௌரவத்தோடும் வாழும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதனைப் பெற்றுக்கொடுப்பதற்காக நானும் எனது கட்சியும் எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகின்றோம்.

தமிழ் மக்கள் தங்களது அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் சுயாதீனமாக முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருப்பதை நான் கொள்கையளவில் ஏற்றுக்கொள்கின்றேன். இன்றைய சூழ்நிலையில் நாட்டில் புரையோடிப்போயிருக்கும் சில பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதில் நான் முனைப்புடன் செயற்பட்டு வருகிறேன்.

அந்தத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக பெரும்பான்மை பலத்தைக்கொண்ட அரசாங்கத்தை அமைக்கவேண்டிய தேவையிருக்கிறது. அத்தகைய பெரும்பான்மையை பெறுவதற்கான பலத்தை தமிழ் மக்களும் எனக்குப் பெற்றுத்தருவார்கள் என்று நம்புகின்றேன் என்றார்.

இதேவேளை பிரதமர் ஒருவர் குருநகருக்கு விஜயம் செய்தது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Fri, 08/16/2019 - 09:38


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக