பொதுஜன பெரமுன தலைவர் மஹிந்த; ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனயின் தலைவருமான மகிந்த ராஜபக்‌ஷ நேற்று உத்தியோகப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் தேசிய மாநாடு கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கும் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் ஆரம்பத்தில் மத வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் பாடல் ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே பொதுஜன பெரமுனயின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷவை முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பொதுஜன பெரமுனயின் தலைவராகவும் இருந்த ஜீ.எல்.பீரிஸ் முன்மொழிந்தார்.

தலைமை பதவியை ஏற்றுக்கொண்டு விசேட உரையை நிகழ்த்திய போதே மகிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷவை தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுகததாஸ உள்ளக விளையாட்டங்களில் குழுமியிருந்த அக்கட்சியின் ஆதரவாளர்கள், அவரின் படத்தை உயர்த்தி கரகோசமெழுப்பி வரவேற்பளித்தனர்.

அத்துடன், நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி வரவேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபாகனேசன், வடக்கு,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் உட்பட பல தமிழ் தலைமைகளும் கலந்துகொண்டனர்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை