தேர்தல் கூட்டு: பலவந்தமாக எம்மை எவரும் இணைக்க முடியாது

வேட்பாளர் பிடிக்காவிட்டால் வெளியேறுவோம்

பலவந்தமாகத் திணித்து எம்மை எந்த சக்திகளும் கூட்டணி அமைக்க முயலக் கூடாதெனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளிருக்கும் குப்பைகளை வெளியே கொண்டு வந்து கழுவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாத்தறை தெனியாவையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றுகையிலே இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கூட்டணி அமைப்பதற்கும், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உண்மையில் இங்கே பெரும் பிரச்சினையில்லை. இதனால் குழப்பமடையவும் தேவையில்லை. இம்முறை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டுமென, நாமே முதலில் தீர்மானித்தோம்.

ஏனெனில் கடந்த 2010, 2015ஆம் ஆண்டுகளில் வெளியில் இருந்தே வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டனர். இந்த முறை ஐ.தே.கவினுள்ளே இருந்து வேட்பாளரை தேர்வு செய்யும் கருத்தை நானே முதலில் சொன்னேன்.

ஆகவே ஐ.தே.கவில் உள்ள சேனநாயக்கவின், ஜயவர்தனவின், பிரேமதாசவின் புத்திரர்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் சிந்தித்து ஒழுங்கான முடிவை எடுக்க வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவையும், பாராளுமன்ற உறுப்பினர் குழுவையும் கூட்டி ஒருநாளில் இந்த பிரச்சினையை தீர்க்கலாம். கூட்டத்தில் எவருக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதென்பதைக் கண்டறிந்தால் பிரச்சினையை உடன் தீர்க்கலாம்.

உண்மையில் இந்த தாமதத்துக்கு நாம் காரணமில்லை என்பதை நாடு முழுக்க உள்ள அடிமட்ட ஐ.தே.க தொண்டர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மக்கள் விரும்பும் வேட்பாளளின் பெயரை வெளியிடுவதை ஐ.தே.கவின் உள்ளே இருந்து சிலர் தடுக்கின்றனர். இவர்கள் எதிர்க்கட்சியுடன் இரகசிய உடன்பாடு செய்துள்ளார்களா எனவும் நான் சந்தேகிக்கின்றேன்.இனிமேல் நாம் பொறுக்க மாட்டோம். எம் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி

வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்க வேண்டும்.எமக்குப்பிடித்தால் ஆதரிப்போம்

இல்லாவிட்டால் வெளியேறுவோம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் மட்டும் போதாது பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை