ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் தொடர்பாக தீர்மானம் எட்டப்படவில்லை

முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைப்பது தொடர்பாக எந்தவொரு இறுதி தீர்மானமும் இது வரை எட்டப்படவில்லை என முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இன்றைய அரசியல் சூழ்நிலைகளிலே எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போது ஒருவரும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்.

அவ்வாறான சூழ்நிலையிலே, முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்து அவருடாக முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக் கூடிய ஒருவரை அடையாளம் கண்டு அவரோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளின் மூலம் அவரது வெற்றியை உறுதி செய்வதன் ஊடாக இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுடைய பாதுகாப்பையும் நீதியையும் நிலைநாட்ட முடியும்.

அதனால் ஒரு முஸ்லிம் வேட்பாளரை களத்தில் இறக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அதனூடாக ஏற்படுகின்ற நன்மைகள், தீமைகள், சட்ட ரீதியான பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்துவருகிறோம்.

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக புத்திஜீவிகள், கல்விமான்கள், உலமாக்கள், சட்ட வல்லுநர்கள், சில அரசியல் பிரமுகர்கள், சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய சமய தௌஹீத் அமைப்புக்களுடைய பிரதிநிதிகள் என பல்வேறுபட்ட தரப்பினருடனும் ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினருடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை