கிழக்கின் சாதனை வீரராக மாறியுள்ள

றிஸ்வான்

45வது தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வீரர்களைத் தெரிவு செய்வதற்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா அட்டாளைச்சேனையில் அண்மையில் நடைபெற்றது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மெய்வல்லுநர் வீரர் ஏ.எம்.எம்.றிஸ்வான் மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றார்.

ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் மற்றும் 4x100 மீற்றர், 4x400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றார்.

விளையாட்டுத்துறையில் மிகுந்த விருப்புடன் ஈடுபட்டுவரும் ஏ.எம்.எம்.றிஸ்வான் கடந்த மூன்று வருடங்களாக மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

ஆரம்பகாலத்தில் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டுவந்த ஏ.எம்.எம்.றிஸ்வான் பின்னர் ஓட்ட நிகழ்ச்சியிலும் பங்குபற்றினார். 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்திலும், முப்பாய்ச்சல் போட்டியிலும், 400 மீற்றர் ஓட்டத்திலும் பங்குபற்றிவருகின்றார்.

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் திகதிகளில் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் முதலாம் நாள் இடம்பெற்ற ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் ஓடி றிஸ்வான் தங்கப்பதக்கத்தினை வென்றார்.

அதேநாள் மாலை இடம்பெற்ற 4தர 100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் பங்குகொண்ட இவர் தங்கப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார். இரண்டாவது நாள் இறுதியில் இடம்பெற்ற 4x400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் பங்குபற்றிய றிஸ்வான் தங்கப்பதக்கத்தினைப் பெற்றார்.

4x400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் றிஸ்வான் குழுவினர் கிழக்கு மாகாணத்தின் புதிய சாதனையையும் ஏற்படுத்தினர். 3 நிமிடம் 30 செக்கன் 00 மில்லி செக்கன்களில் ஓடியே புதிய சாதனையை றிஸ்வான் குழுவினர் படைத்தனர். கடந்தகால சாதனையாக 3நிமிடம் 31 செக்கன் 01 மில்லி செக்கன்களாக இருந்தது.

இந்த வெற்றிகள் மூலம் ஏ.எம்.எம்.றிஸ்வான் பதுளை வின்சன் டயஸ் மைதானத்தில் ஓக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ள 45வது தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளார்.

ஏ.எம்.எம்.றிஸ்வான் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பிரகாசிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த 2018ம் ஆண்டு மாத்தறை கொடவில விளையாட்டரங்கில் இடம்பெற்ற 30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் அம்பாரை மாவட்ட அணியில் இடம்பெற்ற ஏ.எம்.எம்.றிஸ்வான் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றார்.

இதன் மூலம் தேசிய மட்டத்தில் முதலாவது பதக்கத்தினை வென்று தனது திறமையை பறை சாற்றியதுடன் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையைப் பெற்றுக்கொடுத்தார்.

2016ம் ஆண்டுதான் றிஸ்வானுக்கு மாவட்டம் மற்றும் மாகாணப் போட்டிகளில் வெற்றியீட்டும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்படி 2016ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் சார்பாக பங்குகொண்ட ஏ.எம்.எம்.றிஸ்வான் 1.78 மீற்றர் பாய்ந்து இரண்டாமிடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினைப்பெற்றார்.

இதன் மூலம் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் இவர் பெற்றிருந்தார்.

அதேபோன்று 2016ம் ஆண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் பல சவால்களுக்கு மத்தியில் முதல் தடவையாக மங்குபற்றும் வாய்ப்பைப் பெற்ற றிஸ்வான் 1.78 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தினை வென்று தேசிய விளையாட்டு விழாவிற்கு தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றிருந்த போதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருந்த போதிலும் தேசிய மட்டப் போட்டிக்கான அனுபவத்தினைப் பெற்றுக்கொண்டார்.

2017ம் ஆண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் நிகழச்சியில் பங்கேற்ற றிஸ்வான் 1.80 மீற்றர் உயரம் பாய்ந்து முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தினை வென்று கொடுத்து தனது பாடசாலையான அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்திற்கு பெருமையை தேடிக்கொடுத்தார்.

இவ்வாறான நிலையில் 2017ம் ஆண்டு இறுதிப்பகுதியில் விளையாட்டு அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் தேசிய இளைஞர் பயிற்சி அணியிக்கு தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகளை மேற்கொண்டார்.

தேசிய பயிற்சி அணியில் பயிற்றுவிப்பாளரின் ஆலோசனைக்கமைவாக 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் பயிற்சிகளைப் பெற்ற றிஸ்வான் 2018ம் ஆண்டு இடம்பெற்ற தேசிய கனிஸ்ட மெய்வல்லுநர் போட்டியில் ஐந்தாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தடைதாண்டல் ஓட்டத்தில் ஒழுங்கு முறையான பயிற்சிகளை மேற்கொண்டுவரும் இவர் கிழக்கு மாகாணத்தின் தடைதாண்டல் சாதனை வீரராக மாறியுள்ளார். மாகாணம் கடந்து தேசிய சாதனை வீரராக மிளிர வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை விளையாட்டமைச்சினால் முன்னெடுக்கப்படும் கிறிடா சக்தி நிகழ்ச்சித்திட்டத்திலும் சில மாதகாலம் பயிற்சிகளையும் இவர் பெற்றுள்ளார்.

அந்தவகையில் இம்மாத நடுப்பகுதியில் அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற அம்பாரை மாவட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டியில் 20 வயதுக்கு மேற்பட்ட வயதுப்பிரிவில் பங்குபற்றிய ஏ.எம்.எம்.றிஸ்வான் 110 மீற்றர் தடைதாண்டல், முப்பாய்ச்சல் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதங்கங்களைப் பெற்றுள்ளார்.

அதிலும் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் 1.90 மீற்றர் உயரம்பாய்ந்து தனது சிறந்த பெறுதியைப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இந்த வெற்றிகள் மூலம் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 31 வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்கான வசதி வாய்ப்புக்கள் இன்றி கஸ்டமான சூழ்நிலையை ஆரம்ப காலத்தில் றிஸ்வான் எதிர்நோக்கிய போதிலும் லக்கி விளையாட்டுக் கழகம் அவருக்கான சகல வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தனது விளையாட்டுத்துறை ஆரம்பத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இன்றுவரை பாடுபட்டு உதவி செய்துவரும் தனது பயிற்றுவிப்பாளரை நன்றியுடன் நினைவு கூறும் ஏ.எம்.எம்.றிஸ்வான் .

தனது அதீத திறமையினால் பாடசாலை பயிற்றுவிப்பாளர் நியமனத்தைப் பெற்றுள்ள ஏ.எம்.எம்.றிஸ்வான் பாடசாலை வீரர்களையும் தனது அனுபவத்தின் மூலம் பயிற்றுவித்து அவர்களையும் தேசிய மட்டத்தில் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துவோம்.

2017ம் ஆண்டு தனது பாடசாலைக்காக கிழக்கு விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றடுத்த றிஸ்வான் 2019ம் ஆண்டு தனது பாடசாலைக்கே பயிற்றுவிப்பாளராக நியமனம் கிடைத்து கடமையேற்றிருப்பதும் ஒரு சாதனைதான்.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை