பொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு

பொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு-Complaint Against Mannar Police Officer at HR Commission

தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

தன்னுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும் இரவு நேரங்களில் தொடர்சியாக அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் கூறி   தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு  கோரி, நேற்று வெள்ளிக்கிழமை மாலை (16) மன்னாரிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தலைமன்னார் கிராமப்பகுதியில் வசிக்கும் எனது கணவர் முச்சக்கர வண்டி ஓட்டுநராவார். ஒரு நாள் நள்ளிரவு எனது கணவர் அவசரமாக முச்சக்கர வண்டி சவாரிக்குச் சென்ற போது வாகன அனுமதி பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வீட்டிலே விட்டுச் சென்று விட்டார்.  

இந்நிலையில்  உடனடியாக எனது தம்பியிடம் குறித்த ஆவணங்களை கொடுத்து அனுப்பினேன்.

சற்று நேரம் கழித்து எனது தம்பி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தொலைபேசி அழைப்பு வந்தது. என்னையும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தனர்.  பொலிஸ் நிலையம் சென்ற போது, எனது தம்பி மாடு திருட முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்து செய்யப்பட்டுள்ளதாகவும் தம்பியை விடுவிக்க வேண்டுமாயின், நான் அழைக்கும் இடத்திற்கு தனியாக வர வேண்டும் என குறித்த பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

அதனால் நான் கோபம் அடைந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவே வெளியேறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சற்று நேரத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி தனது கையடக்க தொலைபேசிக்கு   அழைப்பு மேற்கொண்டு அவருடைய நிபந்தனைக்கு அடிபணியுமாறு கோரியுள்ளார்.

இந்நிலையில் தனது கணவனின் அறிவுரையின் படி, தான் குறித்த பொலிஸ் அதிகாரியின் தொலைபேசி உரையாடலை பதிவு செய்தேன்.

பின்னர் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த உரையாடல்களை ஒப்படைத்தேன். அதற்கமைய, குறித்த பொலிஸ் அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் மாற்றம் செய்வதாக அங்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் குறித்த அதிகாரி தொடர்ச்சியாக எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார்.

ஆயினும் குறித்த பொலிஸ் அதிகாரியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்ததால், எனக்கு தொடர்சியாக இரவு நேரங்களில் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செயற்படுவதோடு, பழிவாங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்.

எனவே மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த விடயத்தில்  தலையிட்டு நீதியை பெற்று தந்து எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் குறித்த முறைப்பாட்டில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

(மன்னார் குறூப் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)

Sat, 08/17/2019 - 12:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை