அஜந்த மெண்டிஸ் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த அஜந்த மெண்டிஸ் கடந்த 4 ஆண்டுகளாக எவ்விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்துவந்த நிலையில் (28) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட அஜந்த மெண்டிஸ் 1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி பிறந்தார். ஆரம்ப காலத்தில் தனது தொழிலுக்காக இலங்கையின் பாதுகாப்பு படையில் ஒரு படை வீரராக இணைந்த இவர், அங்கு காணப்படுகின்ற விளையாட்டு கழகத்தில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தினார்.

இலங்கை இராணுவ கழகத்தில் கிரிக்கெட் விளையாட்டை தொடர்ந்த மெண்டிஸ் வித்தியாசமான சுழல் பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களை இலகுவாக ஆட்டமிழக்கச்செய்து வந்தார். இராணுவ விளையாட்டு கழகத்திற்காக 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏ தர போட்டியின் ஊடாக கிரிக்கெட் வாழ்க்கைக்குள் தடம்பதித்தார்.

அதனை தொடர்ந்து அதே தொடரில் முதல்தர போட்டியிலும் தடம்பதித்தார். பின்னர் டி20 கிரிக்கெட், உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரி 20 கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். தனது மாயாஜால சுழல் மூலம் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அசத்திவந்த அஜந்த மெண்டிசுக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு உருவானது.

2008 ஆம் ஆண்டு இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் அஜந்த மெண்டிஸ் எனும் சுழல் பந்துவீச்சாளர் முதல் முறையாக கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார்.

2008 ஏப்ரல் 10 ஆம் திகதி இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய மெண்டிஸ் கன்னி ஒருநாள் போட்டியிலேயே 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தனது மாயாஜால சுழல் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அசத்திவந்த மெண்டிஸுக்கு 2008 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் கிடைத்தது. தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய மெண்டிஸ் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள் என தனது கன்னி டெஸ்ட் போட்டியிலேயே 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி தான் ஒரு சுழல் மன்னன் என்பதை நிரூபித்தார்.

டெஸ்ட் அறிமுகத்தையும் தொடர்ந்து 2008 ஒக்டோபர் 10 ஆம் திகதி கனடாவில் வைத்து சிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி மோதிய ரி 20 சர்வதேச போட்டியில் ரி 20 சர்வதேச அறிமுகமும் அஜந்த மெண்டிஸுக்கு கிடைத்தது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட்டில் அசத்தியதை போன்று கன்னி ரி 20 சர்வதேச போட்டியிலும் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியது மாத்திரமல்லாமல், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை