திருச்சொரூப கண்ணாடி மீது கல்வீச்சு; கட்டுவாபிட்டியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்தலத்துக்கு விரைந்து அமைதிப்படுத்தினார் பேராயர்

நீர்கொழும்பு மீரிகம வீதியிலுள்ள புனித செபஸ்தியார் திருவுருவசிலைக்கு நேற்று (06) அதிகாலை இனந்தெரியாத சிலர் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கண்ணாடி பேழைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்துக்கு சொந்தமான  செபஸ்தியார் உருவச்சிலையை தாங்கிய கண்ணாடிப் பேழைக்ேக சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை சுத்தப்படுத்தும் பணிக்கு வந்த பெண்ணொருவர் உருவச்சிலையின் கண்ணாடிப்பேழை உடைந்திருப்பதை கண்டு அயலவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவ்விடத்தில் மக்கள் கூடிய நிலையில் பொலிஸார் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

இச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுவாப்பிட்டி பிரதேச மக்கள் நீர்கொழும்பு மீரிகம வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர். அங்கு கூடியிருந்த சிலர் அப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தினர். ஆர்ப்பாட்டம் காரணமாக விஷமிகள் இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம் என்ற காரணத்தால் வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்த பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, உடனடியாக கட்டுவாபிட்டிக்கு வருகைதந்து நிலைமைகளைப் பார்வையிட்டார். அங்கு கூடிருந்த மக்கள் அனைவரையும் கட்டுவாபிட்டி தேவாலயத்துக்கு வருமாறும் அழைப்புவிடுத்தார்.

தேவாலயத்தில் மக்கள் முன் கருத்து தெரிவித்த பேராயர்,

நானொரு முக்கிய பயணம் செல்ல ஆயத்தமானபோது இந்த சம்பவம் அறிந்து அவசரமாக இவ்விடத்துக்கு வந்தேன். அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக உண்மையைத்தெரிந்து கொள்ள உங்களுக்கு இருக்கும் உரிமைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இது தொடர்பாக நான் நிறைய பேசியுள்ளேன். நான் எந்த ஒரு சக்திக்கும் பயப்பட மாட்டேன் இன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அறிந்துகொள்வதற்கு சிறிது காலம் தாருங்கள். புனித ஞாயிறன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்திடமும், அதிகாரிகளிடமும் உண்மையை தெரிவிக்குமாறு கோரியிருந்தேன்.

இருந்தும் இதுவரையில் எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை மீண்டும் மீண்டும் இந்த அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் எங்களுக்கு உண்மையை தெரியப்படுத்துங்கள், இச் சம்பவங்களுக்குப் பின்னனியில் இருப்பவர்களை வெளிப்படுத்துங்கள் என்றே கேட்கிறேன்.

நான் உங்கள் அனைவரிடமும் கூறுகின்றேன் உங்களை நான் தனிமைப்படுத்த மாட்டேன். உங்கள் உயிர்கள் எனக்கு பெறுமதிவாய்ந்தவை. இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பது அரசியல் சக்கதிகளா? அல்லது சர்வதேச சக்திகளா? என்று தெரியாமல் குழப்பநிலையை தோற்றுவிக்க வேண்டாம். எந்த ஒரு கட்சி அடுத்து ஆட்சி அமைத்தாலும் இச்சம்பவம் தொடர்பாக உண்மைகள் தெரியும் வரை நான் விடமாட்டேன். உங்கள் அனைவரையும் கையேடுத்து வணங்கி கேட்டுக்கொள்கின்றேன் தற்போது அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து மக்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

 

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை