தமிழரின் யதார்த்தபூர்வமான உண்மைகள் மறைக்கப்படுவதாலே பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன

சோ. கணேசமூர்த்தி

தமிழ் மக்களின் யதார்த்தபூர்வமான உண்மைகளை மறைத்து விடக்கூடாது. நாங்கள் அனைத்தையும் மறைத்துக்கொண்டு வருவதாலேயே நீண்டகாலமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள நான்கு குளங்கள் 12 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

தேர்தல் காலம் வந்தால் எங்களுக்கு ஒரு களியாட்டம். பல கட்சிகள் வந்து பல பொய்யான வாக்குறுதிகளை கூறி எங்களை ஏமாற்றி பெறுமதியான வாக்குக்களை பிரிக்கச் செய்கின்றார்கள். இதனால் அரசாங்கத்திலே பலம்வாய்ந்த ஒரு அமைச்சரை பெறமுடியாத நிலமை ஏற்படுகின்றது. இதனால் எங்கள் பிரதேசங்களை துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லை இவ்விடயத்தினை நாங்கள் அனைவரும் சற்று சிந்திக்கவேண்டும் என்பதே எனது அவா.

பட்டிருப்பு தொகுதி கடந்த காலங்களாக எவ்விதமான அபிவிருத்திகளும் இல்லாமல் இருந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் பல கோடி ரூபா நிதிகளை நான் கொண்டு வந்து இன்று பாரிய அபிவிருத்தியினை நோக்கி பட்டிருப்பு தொகுதி சென்று கொண்டிருக்கின்றது.

இந்த தேசிய அரசாங்கம் வருகின்ற தேர்தலுக்குப் பின்னரும் ஆட்சியில் இருக்கும்.எமது அரசை எவராலும் அசைக்க முடியாது. இந்த அராசாங்கம் எமது மக்களுக்காகவே இன்றும் எதிர்வரும் காலங்களிலும் சேவையாற்ற இருக்கின்றது. கடந்த காலங்களில் நான் பிரதியமைச்சராக இருக்கின்ற காலத்தில் எனது அமைச்சில் போதிய நிதியிருந்தும் இப்பிரதேசங்களை என்னால் அபிவிருத்தி செய்ய முடியாமல் போய்விட்டது.

என்னால் முடிந்தவரை போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசத்தை ஒரு நகரப்புறம் போல் மாற்றுவேன். விரைவில் அனைத்து மக்களும் பயன்பெறக் கூடிய வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கோ தரமுயர்த்துவதற்கோ திட்டமிட்டுள்ளேன் எனத்தெரிவித்தார்.

மணல்சேனை நிருபர்

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை