பயிற்சியாளரை மாற்றுவதில் அவகாசம் கோரும் இலங்கை கிரிக்கெட் சபை

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி குழுவினர் தொடர்பான விவகாரத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் உத்தரவை முன்னெடுப்பதற்கு அவகாசம் கோரி இலங்கை கிரிக்கெட் சபை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“தேசிய அணியின் பயிற்சி குழுவினை மாற்றுவது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விடுத்த உத்தரவை செயற்படுத்துவதற்கு நியூசிலாந்து தொடர் முடியும் வரை அவகாசம் தரும்படி இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்கு குழு கடந்த வெள்ளிக்கிழமை (2) அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது” என்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் முடிவுற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடருக்கு முன்னதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீர் பெர்னாண்டோ கிரிக்கெட் சபைக்கு அனுப்பிய கண்டிப்பான ஒரு கடிதத்தில், தேசிய அணியின் பயிற்சி அமைப்பில் முழுமையான சீரமைப்பு ஒன்றுக்காக கோரப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இலங்கை அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே இருப்பதால், தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க விவகாரத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஹதுருசிங்கவின் ஒப்பந்தக் காலம் முடிவதற்கு இன்னும் 16 மாதங்கள் இருப்பதோடு அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இல்லை.

கடந்த 2017 டிசம்பர் மாதம் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஹதுருசிங்கவின் ஒப்பந்தம் பற்றி இலங்கை கிரிக்கெட் சபை தெளிவாகவே அதிருப்தியில் உள்ளது. எவ்வாறாயினும் ஹதுருசிங்கவின் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டால் அதற்காக இலங்கை கிரிக்கெட் சபை இழப்பீடுகள் வழங்க வேண்டி ஏற்படும் நிலையில் இது தொடர்பில் இரு தரப்புக்கும் தொடர்ந்து இணக்கப்பாடு ஒன்றுக்கு வர முடியாமல் உள்ளது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை