அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் மெக்கல்லம் ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து, கேன் வில்லியம்சன் அணித்தலைவராக பொறுப்பேற்றார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் போன்ற டி20 போட்டிகளில் மெக்கல்லம் விளையாடி வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடிய அவர், தற்போது கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டில் லீக்கிலும் விளையாடியுள்ளார்.

டொரண்டோ நேசனல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மெக்கல்லம், மொண்ட்ரியல் டைகர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியுடன் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு குறித்து கடிதம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அதனை விட்டுவிட்டு போவது என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தருணத்தில், சந்தித்த பல சம்பவங்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன.

கடந்த காலத்தில் நான் எப்படி விளையாடி இருக்கிறேன் என்பதை திரும்பி பார்க்கிறேன். பல சவால்களை முறியடித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனாலும் என்னுடைய வருங்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நினைத்து ஆர்வமாக இருக்கிறேன். அனைத்து நல்ல விடயங்களும் என்றாவது ஒருநாள் முடிவை எட்டும் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்” என தெரிவித்துள்ளார்.

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை