தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுதரும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்போம்

அமைச்சர்  இராதாகிருஷ்ணன்

யுத்தம் நிறைவடைந்து பலவருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு இதுவரை எந்த ஒரு அரசாங்கமும் தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை. எந்த அரசாங்கத்திடமும் நிலையான திட்டமொன்று இல்லை.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் அதற்கான உரிய திட்டமொன்றை புதிய அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

அதற்கேற்ப புதிய அரசாங்கத்தை அமைக்க நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா கயப்புகலை பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட்டது. அதன்போது ஒரு நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினோம். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம் அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன அவற்றை நாங்கள் ஒரு அனுபவமாக கொண்டே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை தெரிவு செய்வதில் அல்லது ஆதரவு வழங்குவதில் சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றோம்.

கடந்த கால அனுபவங்களை கொண்டு எதிர்வரும் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் பொது வேட்பாளர் என்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு அந்த அந்த கட்சியில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து இருக்கின்றது.

அந்த அடிப்படையில் கட்சிகளின் நிலைப்பாட்டை பார்க்கின்ற பொழுது ஐக்கிய தேசிய கட்சியில் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் கூறப்படுகின்றது ஒருவர் பிரதமராக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க, அடுத்தவர் சபாநாயகராக இருக்கின்ற கருஜெயசூரிய, மூன்றாமவர் அமைச்சராக இருக்கின்ற சஜித் பிரேமதாச இந்த மூவரில் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களுக்கு இருக்கின்றது.

கடந்த காலங்களில் நாங்கள் கேட்டுள்ள 50 ரூபாய் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே அவ்வாறான ஒருவரை மீண்டும் தெரிவு செய்வது என்பது எங்களுடைய மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். ஆனாலும் 50 ரூபாவை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு நாங்கள் இருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

நுவரெலியா தினகரன் நிருபர்

 

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை