அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்

டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

139ஆவது அத்தியாயமாக நடைபெறும் இத்தொடரில், ஆண்கள், பெண்கள் என மொத்தமாக ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

கடினத் தரையில் நடைபெறும் இத்தொடரில். உலகிலுள்ள பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இத்தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

முதலாவதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளின் சில முடிவுகளை பார்க்கலாம்,

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், அவுஸ்ரேலியாவின் ஜோன் மில்மேனை எதிர்கொண்டார்.

இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், பெரிதளவான அழுத்தங்களை எதிர்கொள்ளாத நடால், 6--–3, 6-–2, 6-–2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ், சகநாட்டு வீரரான பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்முடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெரிதளவான சவால்களை எதிர்கொள்ளாத டெனிஸ் ஷாபோலோவ், 6-–1, 6-–1, 6-–4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், பிரான்ஸின் கல் மோன்ஃபில்ஸ், ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸ்சுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டே, டை பிரேக் வரை நகர்ந்தது. இதில் கடுமையாக போராடி முதல் செட்டை 7-–6 என மோன்ஃபில்ஸ் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்ட மோன்ஃபில்ஸ், அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-–4, 6-–3 என கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அவுஸ்ரேலியாவின் முன்னணி வீரரான நிக் கிர்கியோஸ், அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்சனுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை கிர்கியோஸ் 6-–3 என கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், கிர்கியோசிற்கு ஸ்டீவ் ஜோன்சன் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நீண்டது.

எனினும், இந்த செட்டில் விட்டுக்கொடுக்காது சிறப்பாக விளையாடிய கிர்கியோஸ், 7-–6 என செட்டை போராடி கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் ஆக்ரோஷமாக விளையாடிய கிர்கியோஸ், இந்த செட்டை என கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளின் சில முடிவுகளை பார்க்கலாம்,

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், யாரும் எதிர்பாராத விதமாக 6-–3, 6-–4 என்ற நேர் செட் கணக்குகளில் அன்னா கலின்ஸ்கயா, வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், பெலரஸ் வீராங்கனை ஆர்யனா சபாலெங்கா, சகநாட்டு வீராங்கனையான விக்டோரியா அஸரெங்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், முதல் செட்டை 6-–3 என விக்டோரியா அஸரெங்கா கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து சுதாகரித்துக் கொண்ட ஆர்யனா சபாலெங்கா, 6-–3, 6-–4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், டென்மார்கின் முன்னணி வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி, சீனாவின் வாங் யஃபன்னுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-–1 என வாங் யஃபன் கைப்பற்றி, வோஸ்னியாக்கிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனையடுத்து ஆக்ரோஷமாக மீண்டெழுந்த கரோலின் வோஸ்னியாக்கி, அடுத்த இரண்டு செட்டுகளையும் 7-–5, 6-–3 என கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

இன்னொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸ்சுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-–3 என சிமோனா ஹெலப் கைப்பற்றினார். இதனையடுத்து பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய நிக்கோல் கிப்ஸ், 6-–3 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது. இதில் நிதானம் கலந்த ஆக்ரோஷத்துடன் விளையாடிய சிமோனா ஹெலப், 6-–2 என செட்டைக் கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை