புயலை அணுகுண்டு போட்டு கலைக்க டிரம்ப் ஆலோசனை

பெரும் சேததத்தை ஏற்படுத்தும் புயல்கள், அமெரிக்காவில் கரையை கடப்பதற்கு முன்னர் அணுகுண்டு வீசி கலைக்க முடியுமா என அதிகாரிகளிடம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபிரிக்க கடலோரப் பகுதியில் உருவாகும் சூறாவளிகள் அட்லாண்டிக் கடல் மீது நகர்ந்து வரும்போது புயலின் கண் என குறிப்பிடப்படும் மையப் பகுதியில் குண்டுவீசுவதன் மூலம் அதை கலைத்துவிட முடியுமா என அதிகாரிகளிடம் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஆனால் டிரம்ப் கூறியது மோசமான யோசனை அல்ல என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்பின் கருத்து புதியது அல்ல என்றும், 1950களில் எய்சன்ஹோவர் ஜனாதிபதியாக இருந்தபோது, அரசாங்க விஞ்ஞானிகளே இப்படிப்பட்ட கருத்தை பரிந்துரைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் புயல்களை குண்டுவீசி கலைப்பது சாத்தியமில்லை என பின்னர் விஞ்ஞானிகளே தெரிவித்துள்ளனர். இருப்பினும் இத்தகைய கருத்துகள் அவ்வப்போது பேசப்படும் நிலையில், புயல்களை குண்டுவீசி கலைப்பது சாத்தியமா என ஜனாதிபதி டிரம்ப் கேட்டதாக தகவல் வெளியானது விவாதத்தை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரம் புயல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பகுதியாக உள்ளது. புயல்கள் கரையைக் கடக்கும்போது உயிர்ச்சேதங்களும் பெரும் பொருட் சேதங்களும் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் கடந்த 2017ஆம் ஆண்டில் கரையைக் கடந்த ஹார்வி புயல் பெரும் பொருட் சேதத்தை விளைவித்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை