வன்முறைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்ைக எடுக்கப்பட வேண்டும்

வெறுக்கத்தக்க பேச்சுகளைக் கண்காணிப்பது அவசியம்

ஐ.நா விசேட பிரதிநிதி அரசுக்கு முதற்கட்ட பரிந்துரை

வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மற்றும் வன்முறைகளைத் தூண்டியவர்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அகமட் சஹீட் அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்துள்ளார்.

வெறுக்கத்தக்க செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் வலையமைப்புக்களை அகற்றி, வெறுக்கத்தக்க குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அணுகல்களை அதிகரிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்திருந்த ஐ.நா விசேட அறிக்கையாளர் அகமட் சஹீட் நேற்றைய தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார். இலங்கை வந்திருந்த சஹீட் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள், அரச பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமதத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்துள்ளார்.

சமய அல்லது நம்பிக்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அறிக்கையிடும் சுதந்திரமான விசேட நிபுணரான இவர், மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சராவார். இவருடைய இலங்கை விஜயம் கடந்த வருடமே திட்டமிடப்பட்டிருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள புதிய சூழலுக்கு அமைய காலத்தின் தேவையாக அமைந்திருந்தது. சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான முன்னைய ஐ.நா அறிக்கையாளார் அஸ்மா ஜஹாங்கீர் 2005 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தில் முன்வைத்த பரிந்துரைகளையும் இவர் ஆராய்ந்திருந்ததுடன், தனது விஜயங்களின் போது கண்டறிந்த விடயங்களை முதற்கட்ட பரிந்துரையாக முன்வைத்துள்ளார்.

தனது விஜயம் தொடர்பான முழுமையான அறிக்கையை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க விருப்பதாகவும் அவர் கூறினார்.

வெறுக்கத்தக்க பேச்சுக்களை கண்காணித்து அவற்றை சர்வதேச மனித உரிமை தரத்துக்கு அமைய எதிர்கொள்வதற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். இதற்காக சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் நடைமுறைகள் பயன்படுத்தப்படுவதுடன், வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கு எதிராக மதத் தலைவர்கள் மற்றும் அரச தலைவர்கள் தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டும்.

தனிப்பட்ட நபர்களின் அடையாளங்களை உள்ளடக்கும் வகையில் கல்வித்துறையில் உடனடியான மறுசீரமைப்புக்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

வன்முறைகள் தூண்டப்படுவதைத் தடுக்கும் விடயத்தில் சமூக ஊடக தளங்கள் மேலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

வன்முறைகளிலிருந்து சமூகங்களைப் பாதுகாக்க போதிய சட்ட ஏற்பாடுகள் இல்லையென்பதே தனது விஜயத்தின் போது முன்வைக்கப்பட்ட பாரிய குற்றச்சாட்டாக அமைந்தது என்றும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அதிகாரிகள் அசிரத்தையாக இருந்ததாகவும் பலர் தெரிவித்ததாகக் கூறினார். முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்களை ஊடகங்கள் ஊக்குவித்துள்ளன என்றும் தான் சந்தித்த பலர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

ஷரியா சட்டத்துக்கு அமைவாகவுள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டமானது சர்வதேச மனித உரிமை தரத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் காதி நீதிமன்றங்களில் பெண்கள் பங்கேற்பதற்கு காணப்படும் மட்டுப்பாடுகள் பற்றிய விடயங்களுடன் மறுசீரமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேநேரம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள சாதகமான செயற்பாடுளையும் அவர் பாராட்டியுள்ளார். குறிப்பாக சமாதானம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான சர்வமதம் குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவை பாராட்டிய அவர், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலகத்தின் பணிகளையும் வரவேற்றிருந்தார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கிய ஒத்துழைப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டிருந்தது.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை