நாட்டின் சுதந்திரம், இறையாண்மையில் அமெரிக்கா தலையீடு செய்ய முடியாது

முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களை மீட்டவர் சவேந்திர சில்வா

இலங்கையின் சுயாதீனம் மற்றும் இறையாண்மையில் அமெரிக்காவும், இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கும் தலையீடு

செய்ய முடியாதென தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் அடிப்படைவாதத்தையும், தீவிரவாதத்தையும் கிளர்ந்தெழச்செய்யுமென்றும் அக்கட்சி குற்றஞ்சாட்டியது.

கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சு.கவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேக்கர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இறுதியுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகள் இரண்டரை இலசட்சத்திற்கும் அதிகமான மக்களை குவித்திருந்தனர். முள்ளிவாய்க்கால் கடற்கரை மற்றும் களப்புக்கு இடையில் இவர்கள் சிக்குண்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையிலான 57ஆவது படையணிதான் புலிகளுக்கு எதிராக போரிட்டு மக்களைப் பாதுகாத்தது.

அந்த மக்களிடம் சவேந்திர சில்வா தொடர்பில் கேட்டால் கூறுவார்கள். ஆனால், இதனைதான் மனிதவுரிமை மீறலெனக் கூறுகின்றனர்.

2015ஆம் ஆண்டு அப்போது வெளிவிவகார அமைச்சராகவிருந்த மங்கள சமரவீர ஜெனிவா பிரகடனத்தில் கையெழுத்திடச் சென்றிருந்தார். என்றாலும், ஜனாதிபதி அதனை தடுத்தார். இல்லாவிட்டால் இன்று சர்வதேச நீதிபதிகள் எமது இராணுவத்தினரை கூண்டில் நிறுத்தி விசாரணைகளை ஆரம்பித்திருப்பர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும், டயஸ்போராக்களுக்கும் தேவையானதையே அமெரிக்கா,கனடா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள் செய்கின்றன.

காரணம், அங்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதே. சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததை நாம் வரவேற்கின்றோம்.

இலங்கையின் சுயாதீனத்தில் தலையீடு செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு கிடையாது.

இந்த விடயத்தில் அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன. தமிழ் அடிப்படைவாதம் மற்றும் தமிழ் தீவிரவாதத்தை கிளர்ச்சியடைய செய்யும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

நாங்கள் தெளிவாகக் கூறுவதாவது, அமெரிக்காவோ அல்லது இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமே இலங்கையின் சுயாதீனம், இறையாண்மையில் தலையீடு செய்ய முடியாது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை