பருவகால அரசியல்வாதியாக மஹிந்த செயற்பாடு

தமிழர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை

தமிழர்களை இனவழிப்புச் செய்துவிட்டு அரசியல் தீர்வை தருவதாக ஏமாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷ தற்போது தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாமென்ற நப்பாசையில் பருவகால அரசியல்வாதியை போன்று கருத்து வெளியிட்டு

வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தின. இதன்போது, 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்குவதே தமது எண்ணம் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஒத்துழைப்பை வழங்காததாலே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது போனதாகவும் கூறியுள்ளார்.

இக்கருத்துத் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தமிழ் மக்களை இனவழிப்பு செய்துவிட்டு அரசியல் தீர்வை தருவதாக ஏமாற்றிய ஒருவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாகவும் கூறியிருந்தார். ஆனால், தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டுமென்ற எண்ணத்தில் மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் வரவுள்ளதால் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவேன், புதிய அரசியலமைப்பை கொண்டுவருவேனென கூறிவருகிறார்.

எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழர்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள்.

அவர் ஒரு பருவகால அரசியல்வாதியைப் போன்றே கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை