முறையான தொடர்பாடல் இன்மையே தாக்குதல் இடம்பெறக் காரணம்

புலனாய்வு தகவல்கள் தொடர்பில் முறையான தொடர்பாடல் இல்லாமையே இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தது. எனக்கு புலனாய்வு தகவல் வழங்கப்படவில்லை எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது,

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் முப்படை, புலனாய்வு பிரிவுகள் என்பன எனக்குக் கீழ் இருக்கவில்லை.பாதுகாப்பு சபையிலும் புலனாய்வு மீளாய்வு கூட்டத்திலும் ஆராயப்படும் விடயங்கள் குறித்துத் தான் எனக்குத் தெரியும்.தேசிய பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற பொறுப்பே எனக்கு வழங்கப்பட்டிருந்தது.

காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களுக்கு இடையிலான  பிரச்சினை குறித்து ஆராயப்பட்டது. அடிப்படைவாதம் பற்றியும் சிரியா சென்று வந்த குடும்பம் பற்றியும் பாதுகாப்பு கூட்டங்களில் ஆராயப்பட்டது. இலங்கையில் பாதுகாப்பு தாக்குதல் மேற்கொள்ளப்படுவது பற்றி கலந்துரையாடப்படவில்லை.நான் கலந்து கொண்ட கூட்டங்களில் அவ்வாறான விடயங்கள் பேசப்படவில்லை.

நான் மட்டக்களப்பிற்கு சென்ற போது முஸ்லிம் மக்கள் எம்முடன் பேசினார்கள். இங்கு பல குழுக்கள் செயற்படுவதாக அவர்கள் கூறினார்கள்.அடிப்படைவாதம் இருப்பதாக உறுதிப்படுத்தும் வகையில் தகவல் கூறப்படவில்லை.குழப்ப நிலை பற்றியும் கூறப்பட்டது. பயங்கரவாத குழுக்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

மாவனல்லை சம்பவத்தின் பின்னர் அது பற்றி ஆராயப்பட்டது.திகன சம்பவம் குறித்தும் பொதுவாக பேசப்பட்டது.இறுதியாக நான் 2018 ஒக்டோபர் மாதம் தான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்றேன்.

புலனாய்வு தகவல் பரிமாற்றம் இல்லாமையினாலே இவ்வாறான தாக்குதல் நடந்துள்ளது. புலனாய்வு பிரிவுகள் தனித்தனியாக செயற்பட்டன. 2015 இல் இருந்து இன்று வரை 5 பேர் பாதுகாப்பு செயலாளர்களான இருந்துள்ளனர். பாதுகாப்பு தகவல்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் இருக்கிறது.

பாரதூரமான பிரச்சினைகளின் போது பாதுகாப்பு சபையில் அது பற்றி ஆராயப்படும். ஆனால், முடிவுகள் எடுக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் எனது பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதா என ஆராய்ந்தேன். பிரபு பாதுகாப்பு பிரிவால் தகவல் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.இது போன்ற தகவல்கள் கிடைப்பதாகவும் எனது பாதுகாப்பு குறித்தே தாம் கவனம் செலுத்தியதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாட்டிலுள்ள சகலருக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை