துருக்கி இராணுவ தொடரணி மீது சிரிய அரச படை வான் தாக்குதல்

வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி பயணிக்கும் சிரிய இராணுவ வாகனத் தொடரணியை தடுக்கும் வகையில் சிரிய அரச படை நடத்திய வான் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது.

இத்லிப் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத ஒருசில பகுதிகளில் ஒன்றான இத்லிப்பில் பாதுகாப்பு மண்டலம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு துருக்கி சிரிய அரசுக்கு ஆதரவளிக்கும் ரஷ்யாவுடன் உடன்பாடு ஒன்றுக்கு வந்தது.

எனினும் இந்த உடன்படிக்கையை மீறு அந்த பகுதியில் கடந்த ஏப்ரல் தொடக்கம் அரச படை தனது தாக்குதல்களை உக்கிரப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் உள்ளது.

இந்நிலையில் தனது கண்காணிப்பு நிலையில் படைகளை வலுவூட்டுவதற்காகவே இத்லிப்பை நோக்கி இந்த வாகனத் தொடரணி பயணித்து வருகிறது. இதில் 50 கவச வாகனங்கள் மற்றும் குறைந்தது ஐந்து பீரங்கிகள் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

எனினும் இந்தப் பிராந்தியத்திற்கு துருக்கி படைகள் வருவது ஒரு ஆக்கிரமிப்புச் செயல் என்று சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த இராணுவ வாகன தொடரணிக்கு அருகில் கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி ரஷ்ய விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதல் கடந்த ஆண்டு உடன்படிக்கையை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் துருக்கி, இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி மோதலுக்கு இட்டுக் செல்லும் ஆபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை