ஹொங்கொங்கில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

ஹொங்கொங்கில் அதிகாரிகள் விதித்திருந்த தடையை மீறி ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலத்தை அந்த நகர பேரவையில் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த சட்டமூலம் காலாவதியான பின்னரும், சீனாவுக்கு ஆதரவான ஹொங்கொங் அரசைக் கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த நிலையில், வார இறுதியான கடந்த சனிக்கிழமையும் தீவிர போராட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்த்த ஹொங்கொங் அரசு முக்கிய வீதிகளில் ஊர்வலங்கள் நடத்துவதற்குத் தடை விதித்திருந்தது.

எனினும், அரசின் உத்தரவை அலட்சியம் செய்த ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.

இந்தப் போராட்டம் நீண்ட நேரம் தொடரும் என்பதை எதிர்பார்த்த கடைக்காரர்கள் தங்களது கடைகளை மூடியிருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போன்று முக்கிய பகுதிகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். முக்கிய வீதிகளையொட்டிய தெருக்களில் போராட்டக்கார்கள் முழுவதும் நிரம்பியிருக்க, பெரிய சாலைகள் ஒருவழிப் பாதைகளாக மாறின.

அனுமதிக்கப்பட்ட பாதைகளைத் தாண்டி ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினால் அது சட்ட விரோதச் செயல் என்று பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் போராட்டக்காரர்கள் அந்தத் தடையை மீறியது பதற்றத்தை ஏற்படுத்தியது.

சனிக்கிழமை நடைபெற்ற போராட்டம் பொதுவாக அமைதியாகவே நடைபெற்றாலும் ஒரு சில இடங்களில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தப் போராட்டம் இன்று திங்கள்கிழமை வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை