மன்னார் வளம் நிறைந்த பிரதேசம்

மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு

மன்னார் பல வளங்களை கொண்ட மாவட்டம். அதிகாரிகள் இப் பகுதி மக்களுக்கு நல்வழிகாட்டி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட காணிப் பயன்பாடு தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

மன்னார் மாவட்டத்தில் அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைபெறும் காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில் அப் பகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளான பிரதேச மற்றும் நகர சபை தவிசாளர்களையும் அழைத்து ஆலோசனை பெறும்போது இவ்வாறான கூட்டங்களில் கருத்து மோதல்கள் இடம்பெறாது.

மாவட்டம் ஒரு வரண்ட பிரதேசம் என பலராலும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு வரண்ட பிரதேசமாக இருந்தாலும் பல வளங்கள் இங்கு உண்டு. இவற்றை இங்கு கடமை புரியும் அதிகாரிகள் நாம்தான் இனம் கண்டு மக்களுக்கு ஏற்றவாறு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தற்பொழுது இப் பகுதி மக்கள் வீட்டுத்திட்டம் காணி என நாள்தோறும் அலைந்து திரிவதையே நாம் கண்டு வருகின்றோம். இவர்களுக்கு காணிகள் வீடுகள் இருந்தாலும் பலர் தங்கள் எதிர்கால சந்ததியினருக்கு சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருவதும் தெரிய வருகின்றது.

இவற்றை விடுத்து கல்வி அறிவிலும் மக்கள் பணியாளர்களாக இருக்கும் நாம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதை வழிகாட்டி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.

தலைமன்னார் நிருபர்

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை