இரு தேர்தல்களையும் அண்மித்த நாட்களில் நடத்த வலியுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை நடத்தி ஜனாதிபதித் தேர்தலுக்கு பேரம் பேச முயற்சி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்துவதானால், அது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினத்துக்கு அண்மித்ததொரு தினத்திலே நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பு தெரித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவுள்ள சூழலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி அதில் பெற்றுக்கொள்ளும் பெறு பேறுகளுக்கமைய கூட்டணியை அமைக்க பேரம் பேசுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியது.

மருதானை சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் பெப்ரல் அமைப்பு தயாரித்துள்ள சட்ட மூலத்துக்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. தற்போது அந்தச் சட்டமூலம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் உள்ளது. சட்டமூலத்தை நிறைவேற்ற 225 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இச்சட்டமூலம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கின்றோம்.

தொகுதிவாரி முறையில் நடைபெற்ற கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேர்தல் செலவுகள் ஓரளவு குறைந்திருந்த போதும் சில தொகுதிகளில் கோடி கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் 40 கோடிவரை செலவழித்துள்ளார். ஒரு குடும்பத்திற்காக 40ஆயிரம் வரை பொருட்களை வாங்கிக்கொடுத்தே வாக்குககள் பெறப்பட்டுள்ளன. ஆகவே, புதிய தேர்தல் முறையால் மாத்திரம் இதனை சரிசெய்து விட முடியாது. செல்வந்தர்கள் மாத்திரமே இந்த முறைகளால் வெற்றிக்கொள்ள முடிகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 800 இலட்சம்வரை ஒரு வேட்பாளர் செலவு செய்ததாக பகிரங்கமாக கூறுகிறார். அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதும், செலவுசெய்த பணத்தை மீண்டும் உழைக்கவே முன்னுரிமையளிப்பர்.

உலகில் பல்வேறு நாடுகளில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் உரிய சட்டங்கள் உள்ளன. அவ்வாறானச் சட்டத்தைத்தான் நாம் கொண்டுவந்துள்ளோம். இச்சட்டமூலம் நிறைவேற்றப்படுவதால் பல்வேறு தவறுகளை தடுக்க முடியும். கடந்த நான்கு தசாப்தகாலமாக இதனால் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். நாட்டின் அபிவிருத்திக்காக செலவுசெய்யக் கூடிய நிதியே இவ்வாறு விரயமாகிறது.

மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகள் வரை நடத்தப்படாது மாகாண சபைகளின் சட்டமும், ஜனநாயகமும் மீறப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட புதிய தேர்தல்கள் சட்டம் நிர்கதியில் உள்ளது. ஆட்சியாளர்கள்தான் இதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். தமது கட்சியின் வெற்றிக்காக தேர்தல்களை பிற்போடுகின்றனர்.

மாகாண சபைத் தேர்தல் தற்போது நடத்தப்பட்டால் அது ஜனாதிபதித் தேர்தலுக்கு அண்மித்த ஒரு தினத்தில்தான் நடத்தப்பட வேண்டும். முன்னதாக தேர்தலை நடத்தி அதில் பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கானக் கூட்டணியை அமைக்க முடியாது. மாகாண சபைத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றாக நடத்தினால் 200 கோடிகள் வரையான செலவை தடுக்க முடியும். மக்களின் பணத்தில் எவரும் விளையாட முடியாது. இந்நிதிகளை அபிவிருத்திக்காகப் பயன்படுத்தலாம்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 50 சதவீத வாக்குகளை ஒருவர் பெற்றுக்கொள்வது கடினமென்றே நினைக்கின்றோம். கள நிலவரங்களின் பிரகாரம் பிரதான இரண்டு தரப்புகளுக்கு அப்பால் பல முக்கிய தரப்பினரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி முறைமை வந்தது முதல் இரண்டு முறை மாத்திரமே 62 மற்றும் 57 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

ஏனைய அனைத்துத் தேர்தல்களிலும் மிகவும் நெருங்கிய வண்ணமே பெறுபேறுகள் இருந்தன.

இம்முறை மாற்றுத்தரப்புகள் 5 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் இரண்டாம், மூன்றாம் பெறுபேறுகள் முறைக்குச் செல்ல நேரிடும். கடந்தகாலத்தில் அவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் டிசம்பர் 9ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். அதில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை