ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் யாரை ஆதரிப்பது என்று முடிவெடுப்போம்

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

கூட்டு எதிரணியின் வேட்பாளர் யார் என்பது மறைமுகமாக தெரிந்தாலும் நாம் இதுவரை அங்கம் வகிக்கும் ஜக்கிய தேசிய முன்னணியின் யாப்பு பிரச்சினை காரணமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அதற்கான தீர்வின் பின்பே எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என முடிவு செய்யப்படும். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை குறிப்பிடாத நிலையில் எமது நிலைப்பாடு எது என உறுதியாகக்கூற முடியாதுள்ளது என்று நீர்வழங்கல் நகர நிர்மாண உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மலையத்தின் முன்னோடி ஊடக வியலாளரும் மலையத்தின் முன்னோடிச் சஞ்சிகையான மலைமுரசின் ஆசிரியர் அமரர் க.ப.சிவத்தின் நினைவு தினம் மற்றும் அஞ்சலிக் கூட்டம் கண்டி டெவோன் உணவக மண்டபத்தில் இடம் பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதான கட்சிகளது ஜனாதிபதி வேட்பாளர் யார் என இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத காரணத்தால் சிறிய கட்சிகள் என்றவகையில் நாம் யாரை ஆதரிப்பது என்று முடிவுசெய்ய முடியாதுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை பிரதானமாகக் கொண்ட கூட்டணியின் யாப்பு தொடர்பாக சில பிரச்சினைகள் உள்ளதாகவும் அது பற்றிய கலந்துரையாடல் இடம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே யாப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் திருத்தப்பட்டதும் அது பற்றி கலந்தாலோசிக்கப்படும்.

அது மட்டுமல்லாது வேட்பாளர் யார் என்பதை தெரிந்துகொள்ளாத வரையில் எக்கட்சியை அல்லது எந்தக் கூட்டணியை ஆதரிப்பது எனத் தெரிவிக்க முடியாதுள்ளது. ஏனெனில் வேட்பாளரின் கொள்கை என்ன, எமது சமூகத்திற்காக அவர் முன்வைக்கும் திட்டங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை கவனத்தில் எடுத்ததன் பின்பே எமது கட்சி யாரை ஆதரிப்பது என முடிவு செய்யும்.

கூட்டு எதிரணியின் வேட்பாளர் யார் என்பது மறைமுகமாக தெரிந்தாலும் நாம் இதுவரை அங்கம் வகிக்கும் கூட்டணியின் யாப்பு பிரச்சினை காரணமாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுவும் தாமதத்திற்கு ஒரு காரணமாகும்.

கூட்டணி எதுவாக இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை குறிப்பிடாத நிலையில் எமது நிலைப்பாடு எது என உறுதியாகக்கூற முடியாது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதானமாகக் கொண்ட கூட்டணியின் வேட்பாளர் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் என தெளிவாகக் கூறியுள்ளரே எனவே அதில் தாமதம் அவசியமில்லை என கேட்ட போது,

அவர் யார் எனக் கூற வேண்டும். அவரது ஆளுமை எத்தகையது என நாம் அறிய வேண்டும். அவரின் கொள்கை கோட்பாடு போன்ற அம்சங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாது அவர் வெற்றி அடையக் கூடிய ஒரு வேட்பாளராகவும் இருக்க வேண்டும். இது போன்ற பல விடயங்களை கருத்திற்கொண்டதாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு அமையும் என பதிலளித்தார்.

எம்.ஏ.எம்.அமீனுல்லா,

அக்குறணை குறூப் நிருபர்

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை