அறுகம்பையில் உலக சேர்பிங் தரப் படுத்தலுக்கான போட்டிகள்

உலகில் சேர்பிங் விளையாட்டுக்கு புகழ் பெற்ற இடங்களில் ஒன்றான பொத்துவில் அறுகம்பையில், உலக சேர்பிங் தரப் படுத்தலுக்கான போட்டிகள், இலங்கை மற்றும் வெளிநாட்டு சேர்பிங் விளையாட்டில் பிரபல்லியமிக்க வீரர்களின் பங்கு பற்றுதலுடன் செப்டம்பர் 23ஆம் திகதி பிரமாண்டமான வகையில் இடம்பெறவுள்ளது.

அறுகம்பையில் இடம்பெறவுள்ள உலக சேர்பிங் தரப் படுத்தல் போட்டியினையடுத்து அதற்கான முன் ஆயத்த ஏற்பாடுகள் தொடர்பிலான துறைசார் நிபுணர்கள் மற்றும் திணைக்ளத் தலைவர்களுடனான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (26) அறுகம்பை றைஸ்டார் ஹொட்டலில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டார நாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ஏ.எம்.லத்தீப், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸீத், பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் மற்றும் அறுகம்பை சுற்றுலா சபைத் தலைவர் எம்.எச்.ஏ.றஹீம், இலங்கை சற்றுலா கைத்தொழில் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் உள்ளிட்ட இராணுவ, பொலிஸ், கடற்படை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உலகில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து புகழ்பெற்ற 123 சேர்பிங் விளையாட்டு வீரர்களும், இலங்கையிலிருந்து 32 வீரர்களும் இப்போட்டியில் பங்கு பற்றவுள்ளனர். இப்போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 23, 24ஆம்திகதிகளில் உள்நாட்டு வீரர்களுக்கும், 25, 26 ஆம் திகதிகளில் வெளிநாட்டு வீரர்களுக்குமாக இடம்பெறவுள்ளன.

இதற்கமைய பாதுகாப்பு நடவடிக்கை, சுகாதாரம், போக்கு வரத்து, குடிநீர் வசதி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தடங்கலின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை சுழற்சி நிருபர்

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை