காசா எல்லையில் பரஸ்பரம் துப்பாக்கிச்சூடு; பலஸ்தீனர் பலி

காசாவில் இருந்து எல்லை கடந்து இஸ்ரேல் துருப்புகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பலஸ்தீனர் ஒருவர் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மூன்று இஸ்ரேலிய படையினர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில், காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்குச் சொந்தமான முகாம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் பீரங்கி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பீரங்கி தாக்குதலில் பலஸ்தீனர் தரப்பில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டது குறித்து உடன் தகவல்கள் வெளியாகவில்லை.

காசாவுக்கான எல்லை வேலியை ஊடுருவி வந்த தாக்குதல்தாரி துருப்புகள் மீது சூடு நடத்தியதாக இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“அவரை நோக்கி துருப்புகள் சூடு நடத்தியதில் தாக்குதல்தாரி உயிரிழந்தார்” என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. “ஒரு வீரருக்கு மிதமான காயம் ஏற்பட்டதோடு இருவருக்கு சிறு காயம் ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா எல்லையில் வாராந்தம் நடைபெறும் பலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டார்.

கடந்த 2018 மார்ச் தொடக்கம் இடம்பெற்றுவரும் வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது.

அது தொடக்கம் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடுகளில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 297 ஆக அதிகாரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் ஆர்ப்பாட்டங்களின்போது கொல்லப்பட்டவர்களாவர்.

இதில் இஸ்ரேல் தரப்பில் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

காசா மீது 12 ஆண்டுகளாக அமுல்படுத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் முற்றுகையை தளர்த்தவும் தமது பூர்வீக நிலத்திற்கு திரும்பும் உரிமையைக் கோரியுமோ பலஸ்தீனர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்ட நடத்தி வருகின்றனர்்.

2008 தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலே இதுவரை 3 யுத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை