காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகளை வீசியதற்கு பதில் நடவடிக்கையாக காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்றுக் காலை தாக்குதல்களை நடத்தியது.

அதேபோன்று ஒரு தண்டனை நடவடிக்கையாக காசாவின் பிரதான மின் நிலையத்திற்கு எரிபொருள் செல்வதையும் குறைப்பது குறித்து இஸ்ரேலிய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது அந்த பகுதியில் ஏற்கனவே தட்டுப்பாடு நிலவும் மின்சார பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதாக உள்ளது.

ஞாயிறு இரவு காசாவில் இருந்து மூன்று ரொக்கெட் குண்டுகள் தெற்கு இஸ்ரேல் மீது வீசப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டது. இதில் இரண்டு இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.

“இதற்கு பதில் நடவடிக்கையாக சற்று முன்னர் ஹமாஸ் படைப்பிரிவு கட்டளையக அலுவலகம் ஒன்று உட்பட வடக்கு காசாவில் ஹமாஸ் குழுவின் தீவிரவாத இலக்குகள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது” என்று இஸ்ரேல் இராணுவம் நேற்றுக் காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பலஸ்தீன பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் தனிப்பட்ட உத்தரவின் பேரிலேயே எரிபொருள் குறைப்பு இடம்பெறுவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் பிரிவு ஒன்று வெளியிட்ட பிறிதொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதன்யாகு எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி கடும் சவால் மிக்க பொதுத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவரது வலதுசாரி அதிகார மட்டம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை