ஐ.தே.கவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவோம்

தனித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளும் அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வலுவானதொரு கூட்டணியை உருவாக்குவோமென லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்காக எந்தவோர் அர்ப்பணிப்பைச் செய்யவும் சுதந்திரக் கட்சி தயாராக உள்ளதென்றும் அதன் முக்கியஸ்தர்கள் நேற்று (06) தெரிவித்தனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையிலான பேச்சுவார்த்தையையடுத்தே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சி தீர்மானிக்குமென்றும் அவர்கள் கூறினர்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல்சிறிபால டி சில்வா மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர ஆகியோரே கட்சியின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் மேற்கண்டவாறு விளக்கமளித்தனர்.

"ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதே எமது குறிக்கோள். இதற்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்ய சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளது. எதுவாக இருப்பினும் சுதந்திரக் கட்சி தனது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் அதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் களமிறங்கும்," என நிமல் சிறிபால டி சில்வா எம்.பி தெரிவித்தார்.

ஐ.தே.கவை தோற்கடிப்பதாயின் வலுவானதொரு கூட்டணி அவசியம். கூட்டணியொன்றை உருவாக்கிய பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கினால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, எம்.பி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

11 ஆம் திகதிக்குப் பின்னர் இச் சந்திப்பு நடைபெறுமென எதிர்பார்க்கின்றோம். இச் சந்திப்பையடுத்து இரண்டு கட்சிகளதும் நோக்கம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் பற்றிய திட்டங்களை நாம் வகுத்துக்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

இங்கு செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, பொதுஜன பெரமுன கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதில் அங்கத்துவம் பெறவேண்டும் என்ற ஆசையும் எமக்கில்லை. ஆனால், ஐ.தே.க வை தோற்கடிப்பதற்காக வலுவானதொரு கூட்டணி வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என தயாசிறி எம்.பி கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை