அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பொருளாதாரம் இன்று ஸ்திர நிலையில்

இன்னும் 5 ஆண்டுகளில் பாரிய வளர்ச்சி

பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியில் நிர்க்கதியாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பொருளாதாரத்தை இன்று ஸ்திரமான பொருளாதாரமாக தூக்கி நிறுத்தியுள்ளோம். அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பொருளாதாரம் இன்று சாதாரண நிலைக்கு மாறியுள்ளதுடன் எதிர்வரும் ஐந்தாண்டுகளில் வளர்ச்சிகண்ட பொருளாதாரமாக மாற்றமடையுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நிதி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அவர், மேலும் கூறுகையில், 2015ஆம் ஆண்டு பாரிய கடன் சுமைகளுடன் கூடிய நாட்டையே நாம் பொறுப்பேற்றுக்கொண்டோம். எமது அரசாங்கம் அமைந்தது முதல் பாரிய சவால்களையும் எதிர்கொண்டுள்ளோம். 2015,2016ஆம் ஆண்டுகளில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டன. அரசியலமைப்பு சூழ்ச்சி, பயங்கரவாதத் தாக்குதல்கள் என பல்வேறு சவால்களுக்கு நாம் முகம்கொடுத்துள்ள போதிலும் பொருளாதாரத்தை சரியான பாதையில் நகர்த்தி ஸ்திரமானதாக பேணியுள்ளோம். கம்பெரலிய, என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என நிதியை கிராமங்களுக்கு கொண்டுசென்றுள்ளோம்.

அதேபோன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் நாம் செய்துள்ளோம். 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அதிவேகப் பாதைகளைத்தான் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் திறந்துவைத்தார். 1997 முதல் 2014ஆம் ஆண்டுவரையான 17 வருடங்களில் 176 கி.மீ அதிவேக பாதைதான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் நான்கு வருடங்களில் 144 கி.மீ. அமைத்து வருட இறுதியில் திறந்துவைக்கவும் உள்ளோம்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் எந்தவொரு அதிவேகப் பாதையும் ஆரம்பிக்கப்படவில்லை. அவை சந்திரிகா மற்றும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவிருந்த காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டவையாகும்.

ஜனநாயக நாடொன்றில் கருத்து சுதந்திரம், தமது அபிப்பிராயத்தை வெளியிடுவதற்கு பூரண உரிமை அனைவருக்கும் இருந்தது. எமது கட்சியில் கருத்து சுதந்திரத்திற்கு பூரண ஜனநாயகம் உள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடியவர்கள் விருப்பம் வெளியிடலாம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை