தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிட்ட பின்பே தீர்மானம்

வேட்பாளரை அடையாளம் கண்டு ஆதரவு வழங்குவோம்

வேட்பாளர்களை அறிவித்து,தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்ட பின்னரே, எந்தக் கட்சியை ஆதரிப்பதெனத் தீர்மானிக்க முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சம கால அரசியல் தொடர்பாக விளக்கமளிக்கும் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் (04) திருகோணமலை நகரசபை மண்டபத்தில்இடம்பெற்றது. இதில் திருமலை மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்டக்கிளை, பிரதேச கிளைகள், மூலக் கிளைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு பேசிய அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான

கட்சிகள் முதலில் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.இதன் பின்னர் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்களை நாம்,மிகக் கவனமாக ஆராய்வோம்.இதில் தமிழர்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வு வழங்கும் கட்சியை அடையாளம் கண்டு அந்தத் தலைமைக்கே,ஆதரவு வழங்கப்படும். விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய சர்வதேச நாடுகள், தமிழ் மக்களுக்கான தீர்வுகளையும் பெற்றுத்தர ஒத்துழைக்க வேண்டும். இது தொடர்பில் சர்வதேச நாடுகளின் தலைவர்களுடனும் துாதரகங்களுடனும் நாம் பேசி வருகின்றோம். சர்வதேச ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது ஒரு நன்மதிப்புள்ளது. இந்த நாட்டில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்படும் போது அவற்றை நிதானமாகக் கையாண்டு மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை,எடுத்ததாலே இந்த நன்மதிப்பை எமது கட்சி பெற்றுக் கொண்டது.

தமிழ் மக்களின் உரிமை மீட்பு போராட்டம் முன்னேற்றப் பாதையிலே பயணிக்கிறது. அதில் எல்லாவற்றையும் பொது இடங்களில் குறிப்பிட முடியாது. அவ்வாறு குறிப்பிட்டால்,சிங்கள ஊடகங்கள் பெரிதுபடுத்தி நிலைமைகளைக் குழப்பிவிடலாம்.

காணி விடுவிப்பு, காணாமல் போனோர், அரசியல் யாப்பு, அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவை திருத்திகரமாக அமையாமையே எமக்குள்ள பிரச்சினையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் தலைவர் சண்முகம் குகதாசன் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.துரைரெட்ணசிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சிறிநேசன் ஆகியோருடன் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் இளைஞர் அணித் தலைவர் சேயோன்,திருகோணமலை நகரசபை தலைவர் நா.இராஜநாயகம், உப்புவெளி பிரதேசசபை தலைவர் ஞா.ஞானகுணாளன் , வெருகல் பிரதேச சபைத் தலைவர் க.சுந்தரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரொட்டவெவ குறூப்,

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்கள்

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை