இறந்து பிறந்த குழந்தை: கொலை குற்றச்சாட்டிலிருந்து தாய் விடுதலை

கழிப்பறையில் இறந்த நிலையில் குழந்தை பிரசவித்த 21 வயது எல் சால்வடோர் பெண் மீதான மறு விசாரணையில் அவர் கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.

தான் கர்ப்பமுற்றிருப்பதை தெரியாதிருந்ததாகவும் குழந்தை பிரசவிக்கும்போது மயக்கமுற்றதாகவும் எவலி ஹெர்னாண்டஸ் என்ற அந்தப் பெண் தொடர்ந்து கூறி வந்தார். எனினும் அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க அரச தரப்பு வழக்கறிஞர்கள் கோரினர்.

இந்த வழக்கு எல் சால்வடோரில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததோடு அவரை விடுவிக்கும்படி சர்வதேச பெண் உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்ட நாடாக எல் சால்வடோர் உள்ளது. அங்கு எந்த ஒரு சூழலிலும் கருப்பலைப்பு சட்டவிரோதம் என்பதோடு குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

“நீதி வென்றதற்கு இறைவனுக்கு நன்றி” என்று நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பின் நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து ஹெர்னாண்டஸ் குறிப்பிட்டார். அவர் 33 மாதங்கள் சிறை அனுபவித்த நிலையிலேயே விடுதலை பெற்றுள்ளார்.

முன்னதாக ஹெர்னாண்டஸுக்கு கொலை குற்றத்திற்காக 2017 இல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குற்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கற்பழித்ததிலேயே அவர் 18 வயதில் கர்ப்பமுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தொடர்ந்து கல்வி கற்று இலக்கை நோக்கி முன்னோக்கிச் செல்வதே எனது எதிர்காலமாகும். நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன்” என்று அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை