போலிப் பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை

அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக ஊடகங்களின் மூலம் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்த நபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக சுகா தார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் மருந்துக்களுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லையென்றும், அரசாங்க வைத்தியசாலைகளில் எந்த மருந்துகளுக்கும் பற்றாக்குறை இல்லையென மருந்துப் பொருட்கள் விநியோகப் பிரிவின் தலைவர் டொக்டர் சுதர்ஷன அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வாய்மூல விடைக்காக இந்திக அநுருத்த ஹேரத் எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என்ற போலியான  பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக பதுளை, இரத்தினபுரி மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளின் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், தமது வைத்தியசாலைகளில் அவ்வாறு எவ்வித மருந்துத் தட்டுப்பாடும் இல்லையென அந்தந்த வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதேநேரம், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கம் பெறுப்பேற்றுக்கொள்ளவில்லையென்றும் பொய் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அரசாங்க வைத்தியசாலைகள் எவற்றிலும் இல்லாத நவீன கருவிகள் மற்றும் நவீன வசதிகளைக் கொண்டதாக நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அமைந்துள்ளது. அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களுக்குப் போலியான பிரசாரங்களை முன்னெடுத்த நபர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Sat, 08/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை