பற்றி கெம்பஸ் முறைகேடுகள்; சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் விரைவில் முறையீடு

எம்.பியாக இருந்துகொண்டு ஒப்பந்தம் செய்தது தவறு

பற்றி கெம்பஸுக்கு எதிராகவும் முறைகேடுகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் விரைவில் முறையிட இருப்பதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பற்றி கெம்பஸ் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டதும் முதலீட்டுச் சபையுடன் ஹீரா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்ததும் தவறென, சட்ட மா அதிபர் திணைக்களம் கல்வி மற்றும் மனித வள துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பற்றி கெம்பஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆஷு மாரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி மற்றும் மனிதவள துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெறப்பட்டது. அரசாங்கத்தில் இருந்தவாறு இவ்வாறு ஒப்பந்தம் கைச்சாத்திட்டதும் முதலீட்டுச் சபையுடன் ஹீரா மன்றம் ஒப்பந்தமிட்டதும் தவறென சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனால் அவர் எம்.பி

பதவி வகித்தது தவறு எனவும் கூறப்பட்டுள்ளது.மேற்பார்வை குழு அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப் பட்டுள்ளது.

இதன்போது குறுக்கீடு செய்த பிமல் ரத்னாயக்க எம்.பி(ஜே.வி.பி),

இந்த முறைகேடு தொடர்பில் நிதிமோசடிப் பிரிவு, புலனாய்வுப்பிரிவில் ஏன் முறையிடவில்லை? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பதிலளித்த ஆஷு மாரசிங்க எம்.பி,

சகல நிறுவனங்களிலும் இது பற்றி முறையிட இருக்கிறோம்.இந்த விவாதத்தின் பின்னர் முறையிட இருக்கிறோம்.எவருக்கும் இதற்கு எதிராக முறையிடலாம்.

ஹிஸ்புல்லாவின் ஹீரா மன்றத்தை அரச சார்பற்ற நிறுவனமாக பதிவு செய்ய முடியாதென 2012 ஏப்ரல் மாதம் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகம் மறுத்துள்ளது. இதற்கு முதலீட்டுச் சபை அனுமதி வழங்கினாலும் உயர்கல்வி அமைச்சு அனுமதி வழங்கவில்லை என்றும் கூறினார்.

பெற்றிக்கலோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் முறையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். எமது நாட்டில் தனியார் பட்டங்களை வழங்கும் நிறுவனங்களை ஆரம்பிப்பது தொடர்பாக சட்ட திட்டங்கள் உள்ளன. அது தொடர்பான அனுமதி முதலீட்டு சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட அரச நிறுவனங்களில் இருந்து பெற வேண்டும். ஆனால் இந்த சட்டத்தை மீறியவாறே சில தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெற்றிக்கலோ கெம்பஸ் நிறுவனம் தொடர்பாக பாராளுமன்ற மேற்பார்வை குழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதில் மோசடிகள் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தனிப்பட்ட ரீதியில் நான் முன்னெடுப்பதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இதனை நான் நிராகரிக்கின்றேன். நாட்டு மக்களின் பிரச்சினையை எங்களால் பேசாது இருக்க முடியாது. அத்துடன் இந்த பிரச்சினையை ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் இருந்து ஆரம்பித்ததாக கூறப்படுவதனையும் நிராகரிக்கின்றோம். இதனை யாரும் இனவாதமாக பார்க்கக் கூடாது. இது நாட்டு மக்களின் பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. அவர் இந்த அறிக்கையை நிராகரிப்பதற்காக முன்வைக்கும் விடயங்களும் ஏற்க முடியாது.

இதன்படி மேற்பார்வை குழுவின் அறிக்கையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிதி கிடைத்த விதம் குறித்து முறையான விசாரணைகள் அவசியமானது. சகல நிதி நிறுவனங்களினுடான வெளிவிவகார அமைச்சின் ஊடாக இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். பணம் கிடைத்த முறையில் பாரியளவு தவறு நடந்துள்ளது. இலங்கை வங்கிக்கு பணம் வரும்போது அந்த பணம் எவ்வாறு கிடைத்தது என்று குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் குறித்த நிதி கடனாக வந்தது என்று எந்தவித பதிவும் கிடையாது. நாங்கள் இந்த நிறுவனம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய போது அதிகாரிகளை அழைத்து இந்த காணிக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என கேட்ட போது அது தொடர்பாக அனுமதிக்கான கோப்புகளோ, ஆவணங்களோ அவர்களிடம் கிடையாது. மேற்பார்வை குழுவின் அறிக்கையில் சகல விடயங்களும் உள்ளன. நாங்கள் அமைச்சரவையில் அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்.

இதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவையின் உப குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் ஊடாக இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என நாங்கள் கருதுகின்றோம்..

நாங்கள் எமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள 15 பரிந்துரைகளின் அடிப்படையில் செயற்பட்டு இது தொடர்பாக நடந்துள்ள விடயங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை