இந்தியாவுடன் இராஜதந்திர உறவை மேலும் வலுவாக்க அர்ப்பணிப்போடு செயற்படுவோம்

இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியிலான உறவை மிகவும் வலுவானதாக மாற்றியமைக்க நாம் அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

அத்துடன், பொருளாதாரத்தை பலப்படுத்த முடியுமென செயற்பாட்டினால் நிரூபித்துள்ள சமகால அரசாங்கத்தால் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.  

இந்திய நிதியுதவியின் கீழ் கொழும்பு கொம்பனித்தெரு வீதியில் அமைக்கப்பட்ட மெட்ரோ ஹவுஸ் தொடர்மாடி வீட்டுத்தொகுதியை (01) திறந்துவைத்தப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னேறிச் சென்றதால் குறுகிய காலத்திற்குள் நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவர முடிந்தது.  

அரசாங்கத்தின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை காரணமாக  ஆயிரம் மில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் உதவியை பெற்றுக்கொள்ள முடிந்தது.    அதேபோல் ஜப்பான் பிணை முறிச்சந்தையின் மூலம் 500மில்லியன் டொலர் பெறுமதியான பிணை முறிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

பல வருடங்களாக இலங்கையின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கி வருகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்தமை இலங்கை தொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்ப துணை புரிந்தது.  

எதிர்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்றார்.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

 

Sat, 08/03/2019 - 09:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை