வடக்கு, கிழக்கை இணைத்து தென்னை முக்கோண வலயம்

அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவிப்பு

நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு நேற்று முன்தினம் வருகைதந்த அவர் தென்னை செய்கையாளர்களிற்கான மானிய உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,வவுனியா மாவட்டத்தில் தெங்கு பயிர்செய்கையினை அதிகரிப்பதற்காக திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகின்றோம்.

வவுனியா மண் தென்னை செய்கைக்கு ஏற்றதாகவிருக்கிறது. எனவே நாம் எமது மாவட்ட காரியாலயம் ஊடாக உங்களிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவிருக்கிறோம். புத்தளம், குருநாகல் போல வடக்கு, கிழக்கை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றோம்.

இன்று விவசாயிகளது உற்பத்தி பொருட்களிற்கு நியாயமான அல்லது உயரிய விலை கிடைக்காமல் இருக்கிறது. தென்னை செய்கையிலும் நிலமை இதுவே. விவசாயியையும், சந்தையையும் எம்மால் இணைக்க முடியாமல் இருக்கின்றமை துரதிஸ்டமே. அதனால் கூடுதலான சந்தர்ப்பங்களில் இடைத்தரகர்களால் அதிகமான இலாபம் ஈட்டப்படுகின்றது. எனவே நாம் இவ்விடத்தில் மாற்றம் செய்து நேரடியாகவே விவசாயிகளிற்கு அதிக இலாபம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

அதன்படி வடக்கு கிழக்கு முழுவதும் எமது அலுவலகங்களில் தமிழ் உத்தியோகத்தர்களை நியமித்து நேரடியாகவே விவசாயிகளுடன் கலந்துரையாடி சந்தை வாய்ப்புகள் தொடர்பாக தெளிவுபடுத்தவுள்ளோம் என்றார்.

இதேவேளை நேற்றைய தினம் முல்லைத்தீவு சென்ற அமைச்சர் அங்கு தென்னை பயிர்ச்செய்கையாளருக்கான மானியத் தொகையை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா விசேட நிருபர்

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை