எரிபொருள் விநியோகத்தினால் இதுவரை நஷ்டம் ஏற்படவில்லை

எரிபொருள் விலை குறைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகத்தினால் இதுவரை எந்தவிதமான நஷ்டமும் ஏற்படவில்லையென நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஹேஷா விதானகே எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் கூறினார். 

மே மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட பின்னர் கொலன்னாவ எரிபொருள் களஞ்சியத்திலிருந்து பெருந்தொகையான எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதா? என்றும் ஹேஷா விதானகே எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

குறிப்பிடப்பட்ட தினத்தன்று எரிபொருள் களஞ்சியத்திலிருந்து 11,000லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் இதில் 5,653லீற்றர் எரிபொருள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் டிப்போ களஞ்சியங்களில் சேமிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இது தவிரவும் சாதாரண நாட்களில் விநியோகிக்கப்படும் அளவு எரிபொருள்களே நாட்டுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த எரிபொருள் விநியோகத்தினால் அரசாங்கத்துக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லையென அமைச்சர் குறிப்பிட்டார். 

எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படும் நாட்களில் சராசரியாக 6 ஆயிரம், 7 ஆயிரம் லீற்றர் எரிபொருளே விநியோகிக்கப்பட்டுள்ளது. அதற்கு சமமான அளவு எரிபொருளே மே மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட பின்னரும் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மகேஸ்வரன் பிரசாத் 

Sat, 08/10/2019 - 10:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை