மாகாண அமைச்சர் டெனீஸை பதவி நீக்கியது சட்டவிரோதம்

'மாகாண அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை'

வட மாகாண சபையில் அமைச்சராக இருந்த பி.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி, அப்போதைய முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தனது சட்ட அதிகாரத்தை மீறியிருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதற்கமைய வடமாகாண முதலமைச்சர், அமைச்சுப் பதவியிலிருந்து பி.டெனீஸ்வரனை நீக்கியமைக்கான ஆவணத்தை இரத்துச் செய்யுமாறும் ​மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் பி. டெனீஸ்வரனுக்கு பதிலாக ஜி.குணசீலன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோரை வடமாகாண அமைச்சர்களாக நியமிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்த ஆவணத்தை நீக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்கியதை சவால் விடுத்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பி.டெனீஸ்வரன் றிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (05) மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளை

முன்னெடுத்த நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர், முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மனுதாரரான டெனீஸ்வரனை எவ்வித சட்ட நியாயாதிக்கமும் இன்றி அமைச்சுப் பதவியிலிரு ந்து நீக்கியிருப்பதாகவும் இவ்வாறு பதவி நீக்க அவருக்கு எவ்வித அதிகாரம் இல்லை என்றும்

சுட்டிக்காட்டினர்.மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை பதவிகளிலிருந்து விலக்குவதற்கு முதலமைச்சருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாதென்றும் இதுபோன்றதொரு செயற்பாட்டை பின்பற்றியிருக்க வேண்டிய அவசியம் முன்னாள் முதலமைச்சருக்கு இல்லையென்றும் நீதிபதி சமயவர்தன தீர்ப்பு வழங்கினார்.

'அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளதால், கற்பனையில் கூட மாகாண அமைச்சர்களை எவராலும் பதவி விலக்க முடியாது.அத்துடன் அமைச்சர்களை பதவி விலக்குவதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு முதலமைச்சருக்கு வழங்கவில்லை," என்றும் நீதிபதி சமயவர்தன கூறினார்.

மனுதாரரான பி.டெனீஸ்வரன் தனது மனுவில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கே.சர்வேஸ்வரன்,அனந்தி சசிதரன், ஜி.குணசீலன், கே. சிவநேசன்,பி.சத்தியலிங்கம், ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுவதற்கென முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு நீதிமன்றத்தால் நேற்று காலஅவகாசமும் வழங்கப்பட்டது. அத்துடன் மனுதாரருக்கு இதனால் இடம்பெற்ற செலவீனத்தை வழங்குமாறும் முன்னாள் முதலமைச்சருக்கு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, கயத்தி விக்கிரமநாயக்க ஆகியோரும் முதலாவது பிரதிவாதியான முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சார்பில் டொக்டர்.கே கனக ஈஸ்வரன் மற்றும் லக்ஷ்மனன் ஜயக்குமாரும் மூன்றாவது பிரதிவாதி சார்பில் கே.வி.எஸ் கணேசரஞ்சனும் 6வது பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி நிரான் என்கடெல் ஆகியோரும் 07வது பிரதிவாதி சார்பில் விவேக்கா சிறிவர்தன, டி.எஸ்.ஜி மற்றும் கனிஷ்க டி சில்வா பாலபட்டபெந்தி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

முன்னாள் முதலமைச்சர்

விக்னேஸ்வரன் கருத்து,

ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்வி: டெனிஸ்வரனின் வழக்கில் உங்களுக்கு எதிராக தீர்மானிக்கப்பட்டுள்ளதே? நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது. அதாவது, டெனிஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். முன்னைய அமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்ற கேள்வியை நீதியரசர்கள் கேட்கவில்லை.

கேட்டிருந்தால் நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்துப் பற்றி நீதியரசர்கள் ஆராய்ந்திருக்கத் தேவையில்லை. ஆளுநர், தன் கடமையில் தவறிவிட்டார் என்பது வெளிப்படுத்தப் பட்டிருக்கும். எனினும், ஆளுநருக்கே சகல உரித்துக்களும் உண்டு என்று நீதிமன்றம் கூறுவதிலிருந்து 13ஆவது திருத்தச்சட்டத்தின் குறைபாட்டை மக்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டிய அரசியல் யாப்பையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ‘புதிய யாப்பு’ ‘புதிய யாப்பு’ என்று துள்ளுகின்றது. ஆளுநர் என்பவர் ஓர் அரசாங்க முகவர். முதலமைச்சர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்.

மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத உரித்து ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளதை வைத்து 13வதுற திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்ற சட்டம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இனியாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்க முன்வருமா?

லக்மால் சூரியகொட

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை