புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

இலங்கை இராணுவத்தின் 23ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று 19ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 22ஆவது இராணுவத் தளபதியாக இதுவரை காலமும் சேவையாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவின் பதவி காலம் நேற்று முன்தினம் 18ஆம் திகதியுடன் நிறைவு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இராணுவத்தின் பிரதம அதிகாரியாக சேவையாற்றி வந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய தளபதியாக  நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து மேஜர் ஜெனரல் தரத்திலிருந்த சவேந்திர சில்வா லெப்டினன்ட் ஜெனரலாக ஜனாதிபதியால் தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

1964ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி மாத்தளையில் பிறந்த லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி கெடெட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்ட இவர் தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவ அகடமியில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு இரண்டாவது லெப்டினன்டாக வெளியேறிய அவர் இராணுவ சேவை மூலம் சுமார் 34 ஆண்டுகள் தாய் நாட்டிற்காக பல்வேறு பொறுப்புக்களை வகித்து சேவையாற்றி வருகின்றார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் பொறுப்பதிகாரி (கேர்ணல் ஒப் த ரெஜிமண்ட்) செயற்படும் இவர் அவ்வப்போது இராணுவத்தின் பல முக்கிய பொறுப்புக்களை வகித்து சிறந்த தலைமைத்துவத்தையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளார். உள்நாட்டில் இறுதியாக இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது 58 ஆவது படைப் பிரிவிற்கு படைத் தளபதியாகவும் எயார் மொபைல் பிரிக்கட்டிற்கும் கட்டளை அதிகாரியாகவும் இருந்து சிறந்த சேவையை நாட்டிற்காக ஆற்றிய பெருமை இவரைச் சாரும். மேலும் இவர் இராணுவ செயலக பிரிவில் பதவி நிவை உத்தியோகத்தராகவும், திட்டமிடல் பணியகம், பயிற்சி பணியகம், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம், இராணுவ தலைமையக பொது நிரவாக பணியகத்திலும், பதவி நிலை உத்தியோகத்தராக கொமாண்டொ படையணியின் கட்டளை தளபதியாகவும், கடமை வகித்துள்ளார். இவர் இராணுவ கெடெற் இலக்கம் 37 இல் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வந்த வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கும். கெடெற் பயிற்றுவிப்பாளர் அதிகாரியாக கடமை வகித்துள்ளார். மேலும் இராணுவத்தில் ஆற்றிய பாரிய சேவையின் நிமித்தம் இவருக்கு டப்ள்யூ டப்ள்யூ, ஆர் டப்ள்யூ, ஆர்எஸ்பி பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இராணுவ பயிற்சிகளை பெற்றுள்ளதுடன் அமெரிக்க ஹார்வட் பல்கலைக்கழகம், எம்எஸ்சி பாதுகாப்பு பட்டதாரி மற்றும் மனித உரிமை நீதிக் கற்கை நெறிகளையும் மேற்கொண்டுள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இலங்கையின் புத்த ஜயந்தியின் 2600 ஆண்டு நிறைவை முன்னிட்டு 'இலங்கையின் 2600 வருட கால அடையாளம்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் தூதுவராக கடமை வகித்தார்.

ஸாதிக் ஷிஹான்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை