ஐக்கிய தேசிய கட்சியை பின்கதவால் கைப்பற்றும் முயற்சிகள் தோற்கடிக்கப்படும்

ஐக்கிய தேசிய கட்சியை பின் கதவால் வந்து கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்கு இடமளிக்க முடியாதென,மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற கூட்டணி அமைப்பது முக்கியமானது. இதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் கூட்டணி அமைப்பது தொடர்பில்,தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தமே பிரச்சினையாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியுடன் சம்மந்தமில்லாத சிலர் பின்கதவால் கட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர், ஒன்று அல்லது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை கட்டுப்படுத்த இவர்களுக்கு இடமளிக்க முடியாது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுவுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி தொடர்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமானால் அதன் பொதுச் செயலாளர் பதவி கட்டாயம் ஐக்கிய தேசிய கட்சிக்கே வழங்கப்படல் வேண்டும்.

கூட்டணியின் முகவரியாக சிறிகொத்தா முகவரியே பதிவு செய்யப்படல் வேண்டும். தலைமைத்துவ சபை தொடர்பான முரண்பாடுகளும் தீர்க்கப்படல் அவசியம்.

இவ்வாறு இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளடக்கப் படும்வரை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 திருமலை மாவட்ட விசேட நிருபர்.

 

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை