மாகாண சபைத் தேர்தல் வழக்கில் மு.காவும் ஆஜராகும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோரி ஜனாதிபதி தாக்கல் செய்துள்ள பொருட்கோடல் மனு மீதான விசாரணை அமர்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாய்மூல வாதங்களை முன்வைக்க இருப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாதங்களை முன்வைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பொருட்கோடல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் மனுமீதான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி திறந்த அமர்வாக இடம்பெறவுள்ளது. இந்த மனு தொடர்பில் ஆர்வமுள்ள தரப்பினருக்கு இணை முடியும் எனவும் அவர் கூறினார்.இதற்காக முன்கூட்டி அனுமதி பெற வேண்டும் என்று கூறிய அவர், தனக்கு தேவையான தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.வித்தியாசமான கோணத்திலான வாதத்திற்கு அனுமதி கிடைக்கும் எனவும் தமது தரப்பு பழைய முறையிலான தேர்தலுக்கு ஆதரவாக வாதிடும் எனவும் அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலத்தின் பிரகாரம் வகுக்கப்பட்ட எல்லை நிர்ணயம் சிறுபான்மையினருக்கு பாதிப்பானது. இதனால் மீள் எல்லை நிர்ணயம் செய்வதற்கென பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட உபகுழுவானது இன்னும் மீளமைக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல் தாமதமடைந்து செல்கிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியிருக்கிறார். அது தொடர்பிலான மனு எதிர்வரும் 23ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.

இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் சட்டத்தரணிகள் ஆஜராகி எமது தரப்பு வாதங்களை முன்வைக்கவுள்ளனர். புதிய தேர்தல் முறையின் கீழ் வகுக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். முஸ்லிம்களுக்கு பாதகமான அந்த எல்லை நிர்ணயம் சீர்செய்யப்படாத நிலையில் புதிய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை ஏற்க முடியாது.

ஷம்ஸ் பாஹிம், கல்முனை விசேட நிருபர்

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை