உயர்தரம் முடிவடைந்தவுடன் கல்வியை தொடர்வதா, இடை நிறுத்துவதா?

மாணவிகளிடம் பைஸர் முஸ்தபா கேள்வி

மாணவிகள் உயர்தரப் பரீட்சை எழுதி முடிவடைந்த கையோடு 18 வயது நிரம்பியதும் அக்கல்வியைத் தொடர்வதா? அல்லது இடைநிறுத்துவதா? என மாணவிகளிடம் கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா, மாணவிகள் தமது கல்வி நடவடிக்கைகளை உயர்தரக் கல்வியுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாது, தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

கொழும்பு - தெமட்டகொடை, ஹைரிய்யா பெண்கள் கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடங்களை இணைக்கும் மேம்பாலம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை அதிபர் ஏ.எல்.எஸ். நஸீரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் பேசும்போது, மாணவர்களை பெற்றோர்கள் எப்பொழுதும் ஊக்குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களின் கல்வி விடயத்தில் அலட்சியப் போக்கு காட்டாமல், அவர்களுக்கு நல்ல வழிகாட்டல்களை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

சில பெற்றோர்கள், தமது பிள்ளைகள் விடயத்தில் எந்தவித அக்கறைகளும் கொள்ளாது, ஏனோ தானோ என அவர்களை விட்டு விடுகின்றார்கள். இது பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமும் அநியாயமுமாகும். இந்நிலை எம்மிடமிருந்து மாறவேண்டும்.

முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் மேம்பாலத்தின் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் பெளஸியினால் மேம்பாலத்திற்கான நாடா வெட்டப்பட்டு குறித்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை