அரசு முன்னெடுக்கும் அபிவிருத்திகளுக்கு கட்சி பேதமின்றி ஒத்துழையுங்கள்

மாத்தறையில் அமைச்சர் மங்கள அறைகூவல்

அரசாங்கம் மேற் கொள்கின்ற வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கட்சி, நிற, பேதமின்றி சகலரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

மாத்தறை பகுதியில் குறுகிய காலத்துக்குள் ஐயாயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தின் காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக கூறும் மாத்தறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் எங்கே என நான் கேட்கின்றேன். 10 வருடகாலத்தில் வீதிகளை அகலமாக்க முடியவில்லை. நாம் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகளை இன்று காடாக்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் வேலைவாய்ப்புகளும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் பணம் செலுத்தியே தொழில் பெற்றனர். அதற்கு நாம் முற்றுப் புள்ளிவைத்துள்ளோம். அரச தொழில் கிடைக்கும், கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு தொழில் கிடைக்காதவர்களுக்கு நாம் என்டர் பிரைஸஸ் ஸ்ரீலங்கா கடனுதவித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். விசேடமாக தொழில் புரிய ஆற்றல் உள்ளவர்களுக்கு மற்றும் எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகளுக்கு கடனுதவிகள் வழங்கி சிறுசெயற் திட்ட வர்த்தகங்களை ஆரம்பிக்க கை கொடுக்கவுள்ளோம்.

அதேபோல் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் பட்டதாரிகள் தமக்கென சிறு கருத்திட்ட வர்த்தகங்களை ஆரம்பிக்க வட்டியில்லாமல் 15 இலட்சம் ரூபா கடன் வழங்கவுள்ளோம். இதற்கு மேலதிகமாக பெண்களுக்கும் இதே போல் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படியான தருணத்தில் இவ்வாறான வேலைத் திட்டங்களை அரசு முன்னெடுக்கும் போது கட்சி, நிற, பாகுபாடின்றி அனைத்தையும் மறந்து எல்லோரும் ஒன்றுபடவேண்டும்.

இதன் மூலமாக எதிர்வரும் காலங்களிலும் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.

இந் நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச அரசியல்வாதிகள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வெலிகம தினகரன், மாத்தறை தினகரன் நிருபர்கள்

 

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை