சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை பக்கச் சார்பானது

விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டு

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தனிநபர் பிரேரணை உள்நோக்கத்துடனேயே கொண்டுவரப்பட்டுள்ளது. அது பக்கச் சார்பானதாகும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மாகாண சபை தேர்தல் நடத்துவது தொடர்பில் தற்போதைய அரசில் பிரச்சினை நிலவுகின்றது. ஆனால், அதனை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார். பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் போட்டித் தன்மை நிகழ்கின்றது. இந்நிலையில், ஒரு பக்கம் சார்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பாக தனிநபர் பிரேரணையைச் சமர்ப்பித்திருக்க முடியும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில் இருக்கின்றோமா? என ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோரியுள்ளார். எனினும், நீதிமன்றத்தால் அரசுக்கு அறிவுரை மட்டுமே கூற முடியும். இதனைச் செய், அதனை செய் எனக் கூற இயலாது. எனவே, ஜனாதிபதி இவ்வாறான நிலையிலும் நீதிமன்றில் ஏன் வியாக்கியானத்தை கோரினார் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் மாகாண சபை தேர்தலை இப்போது நடத்த முடியும் எனக் கூறினால் கூட, அதனை அரசாங்கத்தினால் நிராகரிக்க முடியும். இதனால், மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளன என்றார்.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை